சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் சுமார் ஆறு கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


ஏழு வாரங்களில் 5,738 வழக்குகள் பதியப்பட்டு 5.93 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.


சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை கடந்த சில மாதங்களாக தொடர் வாகனத் தணிக்கைகளை மேற்கொண்டு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு பல மடங்கு அபராதத்தை அதிகரித்து சென்ற அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி மது போதையில் வாகனம் இயக்குபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது ஏழு வாரங்களில் கோடிக்கணக்கில் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


இதேபோல் சில நாள்களுக்கு முன் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட நவீன சொகுசு கார்களுக்கு சென்னை போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்தனர். சென்னை மெரீனா கடற்கரையில் அதி வேகமான சென்ற 8 சொகுசு கார்களுக்கு தலா 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


அதேபோல் போக்குவரத்து விதிகளுக்கு மாறாக விதவிதமான டிசைன்களில் நம்பர் ப்ளேட்கள் இருந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 


மோட்டார் வாகனச் சட்ட விதிகள் 50,52 ஆகியவற்றின்படி வாகன எண் பலகைகளில் எந்தவிதமான ஆடம்பரமான எழுத்துகளும் பயன்படுத்தப்படுவதற்கு அனுமதி இல்லை, வாகன எண் பலகைகளில் படங்களைப் பயன்படுத்தவும் அனுமதியில்லை. இந்நிலையில் சென்ற பிப்.02ஆம் தேதி 11,784 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 


மேலும் சட்டவிதிகளை மீறி வாகன நம்பர் பிளேட்கள் தயாரிக்கும் கடைகளுக்கும் போக்குவரத்துக் காவலர்கள் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தி எச்சரிக்கை விடுத்தனர்.  இதேபோல் சென்ற மாதம் சென்ற மாதம் போக்குவரத்து வாகன விதிகளை மீறிய,வாகன நிறுத்தக் கோட்டைத் தாண்டி நிறுத்தப்பட்ட வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.


சென்ற 2019ஆம் ஆண்டு முதல் சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள்  நவீன கேமராக்கள் நிறுவப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.  இந்த கேமராக்கள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை துல்லியமாக படம்பிடித்து அனுப்பும் நிலையில், இ-சலான் மூலம் உரிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது .


இரு சக்கர வாகனங்கள் தவிர்த்து சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் அரசு பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னதாக போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் தெரிவித்திருந்தார்.


மேலும் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து மக்கள் சமூக வலைதளங்களில் புகார் தரலாம் என்றும், வாட்ஸ் அப்பில் 9003130103 என்ற எண்ணுக்கு புகைப்படத்துடன் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.


ட்விட்டரில் @ChennaiTraffic, ஃபேஸ்புக் - Greater Chenai Traffic Police, இன்ஸ்டாகிராம் - Chennai trafficpolice ஆகிய பக்கங்களில் புகார் தெரிவிக்கலாம் எனத்  தெரிவித்தார்.