ஹாலிவுட் உலகின் தலைசிறந்த ஹீரோக்களுள் ஒருவர் லியானார்டோ டிகாப்ரியோ. இவருக்கு, இரண்டு வயதிலேயே நடிப்பதற்கு ஆர்வம் வந்துவிட்டதாம். 1991ஆம் ஆண்டில் க்ரைட்டர்ஸ் என்ற படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், டி கேப்ரியோ. What’s eating Gilbert Grape என்ற படத்தில் மனநலம் குன்றிய சிறுவனாக நடித்து அனைவரையும் அசர வைத்தார் லியானார்டோ.
டைட்டானிக் ஜாக்
1997ஆம் ஆண்டு, ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் வெளியான படம் டைட்டானிக். 1912 ஆம் ஆண்டில் நடந்த உண்மைச் சம்பவத்தத் தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில், லியானார்டோ டி கேப்ரியோ ஜாக் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக கேட் வின்ஸ்லெட் ரோஸ் என்ற அழகு ஹீரோயின் ரோலில் நடித்திருந்தார். இதில், ஹீரோவாக நடித்து கடைசியில் உயிரிழக்கும் நாயகன் ரோலில் வந்த ஜாக்கை, பார்த்த முதல் தருணத்தில் இருந்து அனைவருக்கும் பிடித்துப் போனது. “காதலித்தால் டைட்டானிக் ஜாக்கைப் போல காதலிக்க வேண்டும்..” என இன்றும் சில இளசுகள் கூறுவதுண்டு. ஆனால், அந்த ஜாக் கதாப்பாத்திரத்தை லியானார்டோ கொஞ்சம் விட்டிருந்தால் நழுவ விட்டுருப்பார் என அப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார்.
ஜேம்ஸ் கேமரூன் பேட்டி:
ஹாலிவுட்டில் வெற்றிப் படங்களாக குவித்து வரும் இயக்குனர்களுள் ஒருவர், ஜேம்ஸ் கேமரூன். உலகிலேயே அதிக வசூல் புரிந்த திரைப்படம் என்ற சாதனையை இவரது, டைட்டானிக் படம்தான் முதலில் பெற்றது. அடுத்து, 2009ஆம் ஆண்டில் இவரது இயக்கத்தில் வெளியாகியிருந்த அவதார் திரைப்படம் டைட்டானிக்கின் சாதனையை முறியடித்தது. கதை, வசனம், வி எஃப் எக்ஸ், கிராபிக்ஸ் என தன் படங்களில் அனைத்து அம்சங்களையும் வைத்திருப்பார், ஜேம்ஸ்.
இவர், லியானார்டோவிற்கு ஜாக் கதாப்பாத்திரத்தை கொடுத்த கதையை GQ Magazine என்ற பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். அந்த நேர்காணலில் அவர் பேசியுள்ளதாவது:
“லியோவுடனான சந்திப்பு எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அந்த சந்திப்பு மிகவும் வேடிக்கைக்குறியதாக இருந்தது. ஏனென்றால், அந்த சந்திப்பின் போது, கான்ஃபரன்ஸ் ரூமில் என்னுடன் வேலைப் பார்க்கும் அனைத்து பெண்களும் இருந்தனர். ஏதோவொரு காரணத்தைக் கூறி படத்தில் வேலைப் பார்க்கும் பெண் இணை தயாரிப்பாளரிலிருந்து, கணக்காளர் வரை அனைத்து பெண்களும் அந்த இடத்தில் இருந்தனர். அவர்கள் அனைவருமே, லியோவை பார்க்க வேண்டும் என்று அங்கே காத்திருந்தனர். முதல் சந்திப்பிலேயே, என்னை உட்பட அங்கிருந்த அனைவரையுமே வசீகரம் செய்து விட்டார் லியோ.
இருந்தாலும், படத்திற்கு இவர் ஒத்து வருவாரா? கேட் வின்ஸ்லெட்டிற்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரீ வர்க்-அவுட் ஆகுமா? என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. அதனால் அவரை இரண்டு நாட்கள் கழித்து திரும்ப வர சென்னேன். வீடியோ ரெக்கார்ட் செய்வதற்காக கேமராவை அமைத்தேன். ‘நீ டைலாக் பேசுகையில் நான் அதை வீடியோ எடுப்பேன்’ என்று லியோவிடம் கூறினேன். அதற்கு அவர், ‘டைலாக் மட்டும் பேசினால் போதாதா’ என்று கேட்டார். நான் உடனே அவருடன் கைக்குலுக்கி ‘வந்ததற்கு நன்றி’ என்று கூறினேன். அப்போதுதான் அவருக்கு நான் எவ்வளவு சீரியஸாக பேசுகிறேன் என்பது புரிந்தது. அதன் பிறகுதான் அவர் ஸ்க்ரீன் டெஸ்டிங்கிற்கு ஒப்புக்கொண்டார். எனக்கு லியோவின் மீது இருந்த சந்தேகம் எல்லாம், அவர் கேமராவின் முன் நடிக்க ஆரம்பித்தவுடன் காணாமல் போனது. ஏனென்றால் அவருக்கும் நடிகை கேட்டிற்குமான கெமிஸ்டரி மிகவும் அதிகமாக இருந்தது. அப்போதுதான், லியானார்டோவிற்கு ஜாக் கதாப்பாத்திரத்தை கண்டிப்பாக கொடுக்கலாம் என முடிவெடுத்தேன்” இவ்வாறாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் மேற்கூறிய நேர்காணலில் பேசியுள்ளார்.
ஜாக் கதாப்பாத்திரத்தை நொடிப் பொழுதில் இழக்க இருந்த லியானார்டோ, அந்த கதாப்பாத்திரத்திற்காக பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.