ஹாலிவுட்டில் இம்மாதம் 16ஆம் தேதி வெளியாகவுள்ள படம், அவதார் தி வே ஆஃப் வாட்டர். 2009 ஆம் ஆண்டில் வெளியான அவதார் படத்தின் முதல் பாகம், டைட்டானிக்கின் Highest Grossing Film (மிக அதிக வசூல் செய்த திரைப்படம்) எனும் ரெக்கார்டை ப்ரேக் செய்தது. 3டி வடிவில் உருவான இப்படம், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. 


வேற்று கிரகத்தில் வாழும் நவி இன மக்களின் வளங்களை திருடும் மனிதர்கள், அதற்கு எதிராக போராடும் நவி மக்கள், இவர்களுக்கு துணையாக நிற்கும் ‘ஹைப்ரிட்’ அவதாரான ஹீரோ, இவர்களைச் சுற்றி சுழலும் சையின்ஸ் பிக்ஷன் கதைதான் அவதார். இப்படத்தின் இரண்டாம் பாகம்தான் இந்த மாதத்தில் வெளி வர காத்துக் கொண்டிருக்கிறது. 




தினசரி, அவதார் படம் குறித்த ஏதாவதொரு செய்தி வெளிவந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில், லண்டனில் திரையிடப்பட்ட இத்திரைப்படத்திற்கு படம் பார்த்தவர்களிடமிருந்து நல்ல விமர்சனங்களே வந்தன. குறிப்பாக படத்தில் இடம் பெற்றுள்ள கிராஃபிக்ஸ் காட்சிகள் குறித்து நல்லபடியாகவே அனைவரும் கூறியிருந்தனர். இப்பொழுதும் அவதார் படத்தின் கிராஃபிக்ஸ் குறித்துதான் அப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். 


மார்வல்-அவதார் குறித்து கேள்வி:


அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனிடம், படத்தில் இடம் பெற்றுள்ள கிராஃபிக்ஸ் காட்சிகளைப் பார்க்கும்போது மார்வல் என்ன நினைக்கிறார் என்ற கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், “நிச்சயமாக மார்வல் போன்று காமிக் புத்தகங்களில் இருந்து எடுக்கப்படும் படம்தான் இந்த சினிமா உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது” என்று பதிலளித்தார். 


அவரிடம் சமீபத்தில் வெளியான ஒரு மார்வல் படத்தில் இடம்பெற்றிருந்த கிராஃபிக்ஸ் காட்சிகள் குறித்தும், அவைதான் அவதார் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்ததா என்றும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “டெக்னாலஜியில் வளர்ந்து வரும் மாற்றங்களால் பல்வேறு கலைஞர்கள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றனர்.


ஆனால், மார்வலுடன் அவதாரை ஒப்பிட முடியாது. அதில் இடம் பெற்றுள்ள கிராஃபிக்ஸ், விஎஃப்எக்ஸ் வேறு, அவதார் படத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள விஎஃப்எக்ஸ் வேறு. இவை இரண்டையும் ஒப்பிடுவது வீண் செயல் என்றுதான் நான் கூறுவேன். அவதார் படத்திற்கு கிராஃபிக்ஸில் வேலை செய்வதற்காக புது புது கலைஞர்களை வேலைக்கு எடுத்துக் கொண்டேயிருக்கிறாேம். மார்வல் படங்களில் முகத்தை மாற்றுவதற்கு அவர்கள் பின்பற்றும் முறை வேறு,அவதாரில் பின்பற்றப்படும் முறை வேறு. இரண்டையும் ஒப்பிடாதீர்கள்” என்று எரிச்சலாக பதிலளித்துள்ளார் ஜேம்ஸ் கேமரூன். 




இதற்கு முன்னரும், மார்வல் படங்களில் இடம் பெற்றுள்ள கதாப்பாத்திரங்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை பேசினார் ஜேம்ஸ் கேமரூன். இதனால், இவருக்கும் மார்வலுக்கும் இடையே ஏதாவது முன்பகை இருக்குமோ என பலர் சந்தேகக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 


மார்வல் படத்தை முந்திய அவதார்!


அவதார் படம் வெளியாக இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், இப்படம் இந்தியாவில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. ரிலீஸிற்கு முன்னரே, இப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனில் சக்கை போடு போட்டு வருகிறது. அவதார் படம், இந்தியாவில் ரிலீஸிற்கு 10 நாட்களுக்கு முன்னரே, டிக்கெட் முன்பதிவில் மட்டும் 10 கோடி ரூபாய்க்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது. இதற்கு முன்னர், மார்வல் படமான ‘டாக்டர்  ஸ்ட்ரேன்ஞ் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்’ படமே இந்த சாதனையை இந்தியாவில் படைத்திருந்தது. அது மட்டுமன்றி, அவதாரின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் நாளிளேயே 4 கோடிக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததாகவும் கூறப்படுகிறது.