பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் பற்றி தெரிவித்த கருத்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 கடந்த 2009 ஆம் ஆண்டு ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் உலகளவில் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் இப்படம் விருதுகளைப் பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபீஸில் சுமார் 2.85 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்து சாதனைப் படைத்தது. 






கிராபிக்ஸ் காட்சிகள் இவை என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தொழில் நுட்பத்தில் மிரட்டிய அவதார் படம் 5 பாகங்களாக  2 ஆண்டுகள் இடைவெளியில் வெளிவரும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி அவதாரின் அடுத்தப்பாகமாக அவதார்: தி வே ஆப் வாட்டர்  படம் வெளியாகவுள்ளது. 


இதன் டீசர் கடந்த மே 9 ஆம் தேதி வெளியான நிலையில் ட்ரெய்லர் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி  ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம், இம்முறை கடலில் வாழும் உயிரினங்களையும், கனிம வளங்களையும், பாதுகாக்கும்  பண்டோரா உலகம் குறித்து இருக்கப் போகிறது என்பது ட்ரெய்லரில் தெரிய வருகிறது. 






இதனிடையே தற்போது இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அளித்துள்ள பேட்டியில், ஓடிடி ஸ்ட்ரீமிங் கலாச்சாரம், கொரோனா தொற்று உலகை ஆக்கிரமிப்பதற்கு முன்பு நான் இந்த கதையை எழுதினேன். அப்போது இருந்ததை விட இப்போது நாம் வேறு உலகில் இருக்கிறோம். அனைவரையும் தியேட்டருக்கு வர வேண்டும் என நினைக்கிறோம். இந்தப் படம் அதை நிச்சயம் செய்யும் என்றாலும் எத்தனைப் பேர் மாற்றத்திற்கு தயாராக இருக்கிறார்கள் என்பது கேள்வியாக உள்ளது. 


அவதார்: தி வே ஆப் வாட்டர்  படத்தில் இருந்து சில பகுதிகளை எடுத்து மூன்றாம் பாகத்தை  உருவாக்கியுள்ளதாகவும் அதனால் அப்பாகம் நிச்சயம் வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் சந்தை நிலவரமும்  மாறியுள்ளதால் பாக்ஸ் ஆபீஸ் வசூலைப் பொறுத்து 3 பாகங்களோடு அவதார் படத்தை நிறுத்திக் கொள்ளவும் வாய்ப்புள்ளது என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார். இதனால் அவதார் படம் என்னவாகும், ஜேம்ஸ் கேமரூனின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.