விரைவில் ஜெயிலர் 2 :


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து அவருக்கு சிறந்த ஒரு கம் பேக் படமாக அமைந்தது. இதன் இரண்டாம் பாகம் குறித்த பேசுச்சுகள் வெளிவந்த நிலையில் தற்போது அதை உறுதி செய்யும் வகையில் தனியார்  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் 'ஜெயிலர் 2 ' குறித்த அப்டேட் இன்னும் ஒரு மாதத்திற்குள் வரும் என தெரிவித்து இருந்தார். தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறி இருந்தார். இதை பான் இந்தியன் படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


'வாழை'யை பாராட்டிய முதலமைச்சர் :


மாரி செல்வராஜ் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது 'வாழை' திரைப்படம். பிரபலங்கள் பலரும் உணர்ச்சி பூர்வமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் அமெரிக்காவில் முதலீட்டாளர்களைச் சந்திப்பதற்காக சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு சான்பிரான்ஸிஸ்கோ நகரத்தில் வாழை திரைப்படத்தை பார்த்த பிறகு தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 


நடுவானில் 'தி கோட்' கொடி :


வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதன் புரொமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கனடாவில் செயல்பட்டு வரும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கனடியன் ஸ்கைஸ் தளபதி விஜய்க்காக நடுவானில் 'தி கோட்' பட கொடியை பறக்கவிட்டு சாகசம் நிகழ்த்தினார்கள். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. 


சிக்கலில் நெட்ஃப்ளிக்ஸ் :


அனுபவ் சின்ஹா இயக்கத்தில் வெளியான 'IC 814: The Kandahar Hijack' என்ற வெப் சீரிஸ் ஐசி 814 கடத்தல்காரர்களின் இஸ்லாமிய அடையாளங்களை மறைக்கும் வகையிலான மாற்றுப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து சர்ச்சையில் சிக்கியது. இதனால் செப்டம்பர் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகுமாறு Netflix இன் கண்டெண்ட் ஹெட்டை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.


அட்லீயின் அடுத்த பிளான் :


பாலிவுட்டில் 'ஜவான்' படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த அட்லீ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் பாலிவுட் நடிகரை வைத்து படம் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது சம்பந்தமாக நடிகர் சல்மான் கானிடம் கதை சொன்னதாகவும் அவர் ஓகே சொல்லிவிட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.