ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியானது ஜெயிலர் படம். இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கூறிய காக்கா - கழுகு கதை, தயாரிப்பாளர் கலாநதி மாறனின் ஃபேன் பாய் தருணம், அரங்கத்தை அதிர வைத்த அனிருத்தின் பெர்ஃபார்மன்ஸ் என அனைத்தும் படத்திற்கான எதிர்ப்பார்ப்பை ஏகபோகமாக அதிகரித்தது.
தமன்னாவின் காவாலா நடனத்தை காண ஒருதரப்பு மக்களும், ஹுக்கும் பாடலில் ரஜினியின் மாஸ் சீன்களை பார்க்க மற்றொரு தரப்பினரும் திரையரங்கிற்கு செல்ல, எதிர்பாராத விதமாக அமைந்தது வில்லன் வர்மனின் ப்ளேலிஸ்ட்.
தனது எதிரியை நேரில் சந்திக்க செல்லும் ரஜினிக்கு, அல்கா யக்னிக் - உதித் நாரயண் குரலில் உருவான ’தால் சே தால்’ என்ற பாட்டை போட்டு வர்மனும், அவரது கூட்டத்தினரும் ஆடி தியேட்டர் ரசிகர்களை வைப் செய்ய வைத்தனர். இப்பாடலை முதன்முறையாக ஜெயிலர் படத்தில் கேட்ட மக்கள், அப்பாடல் பற்றிய தேடலை ஆரம்பித்து, சமூக வலைதளங்களில் பார்க்கும் இடமெல்லாம், மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். அதிலும், அனிருத் செய்த பெர்ஃபார்மன்ஸ் வீடியோவில் தால் சே தால் பாட்டை இணைத்தது பிரமாதம்.
மற்றொரு முறை ரஜினி வர்மனை பார்க்க செல்லும் போது, கண்ணோடு காண்பதெல்லாம் பாடலை போட்டு வர்மன் அண்ட் கோ ஆட்டம் ஆடியிருப்பர். படத்தை பார்த்த மக்களிடம், ஜெயிலர் படத்தில் எந்த பாடல் பிடித்தது என்ற கேட்டால், வர்மனின் வைப் பாடல்கள்தான் பிடித்தது என்கிறார்கள். படம் வெளியாவதற்கு முன் ட்ரெண்டிங்கில் இருந்த காவாலா, ஹுக்கும் பாடல்களை தூக்கி சாப்பிட்டுவிட்டது வர்மனின் பாடல்கள்.
அனைவருக்குமான பாடல் :
பள்ளி ஆண்டு விழாவில் தவறாமல் இடம் பெறும் ராதை மனதில், தாண்டியா ஆட்டமும் ஆட, மேகம் கருக்குது, நன்னாரே, தால் சே தால் போன்ற பாடல்கள் எல்லாம் பெண்களுக்கான பாடல் என்ற இந்த சமூகம் நினைக்க, அந்த கருத்தை உடைக்கும் வகையில் பெண்களுக்கு போட்டியாக நாங்களும் நடனம் ஆடுவோம் என இறங்கிவிட்டனர் ஆண்கள்.
பழைய பாடல்களை ரசிக்கும் கலாச்சாரம் :
ஒரு பாடல் வெளியான புதிதில் அதை ரசிக்காத மக்கள், அது இன்ஸ்டாவில் ரீல்ஸாக வரும் போது தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். உதாரணத்திற்கு, இறைவி படத்தில் வரும் காதல் கப்பல் பாடல். இன்ஸ்டா பிரபலத்தின் ஒரு ரீல்ஸால் அப்பாடல் சமீபத்தில் ஹிட்டானது.
அது போல் சினிமாவிலும் கதைக்கேற்ற இடங்களில் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான பழைய பாடல்கள் இடம்பெற்று இருக்கும். இது காலம் காலமாக நடந்து வருகிறது. ஆனால் இது பேசப்படவில்லை. ட்ரெண்டிங் இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜின் படங்களாகிய கைதியில் ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே பாடலும், மாஸ்டரில் கருத்த மச்சான் பாடலும், விக்ரம் படத்தில் சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலும் இடம்பெற்று இருக்கும். மற்றவர்கள் போல் ஹிட் பாடல்களை பயன்படுத்தாமல், அந்த காலத்து அண்டர் ரேட்டட் பாடலை பயன்படுத்தி மக்களை ரசிக்க வைப்பதே லோக்கியின் ஹைலைட். இது பெரிதும் கவனிக்கபட்டதற்கு காரணம் சமூக வலைதளங்களின் பரிணாம மாற்றமும் கூட. லோக்கியின் படங்களில் இடம்பெறும் இந்த ஃபார்மாட் நெல்சனின் ஜெயிலரில் இடம்பெற்று சக்ஸஸ் ஆகியுள்ளது.