ஜெயிலர் படத்தில் நடிகர் ஜாக்கி ஷெராஃபின் கதாபாத்திர புகைப்படம் வெளியாகி உள்ளது.


அண்ணாத்த படத்தை அடுத்து ரஜினிகாந்தும், பீஸ்ட் படத்துக்கு பிறகு இயக்குநர் நெல்சனும் இணைந்துள்ள படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், தெலுங்கு நடிகர் சுனில், வசந்த் ரவி, யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு  செய்கிறார்.


இந்நிலையில் இப்படத்தில் இணைந்துள்ள மலையாள சூப்பர் ஸ்டார்  மோகன்லால், நடிகை தமன்னா  ஆகியோரின் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைதளங்களில் வெளியாகி கவனமீர்த்து ட்ரெண்ட் ஆகின.


’முத்துவேல் பாண்டியன்’ என ரஜினியின் கதாபாத்திரத்துக்கு இப்படத்தில் பெயரிடப்பட்டுள்ள நிலையில், முன்னதாக ஜன்னல் வெளிச்சத்தில் ரஜினி சில் அவுட் புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்களை மிகவும் ஈர்த்தது.




தொடர்ந்து சிவராஜ் குமார், மோகன் லால், சுனில், தமன்னா ஆகியோரது புகைப்படங்கள் அதே பாணியில் வெளியாகி லைக்ஸ் அள்ளின. அந்த வரிசையில் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகரும் நடிகர் ரஜினியின் நண்பருமான ஜாக்கி ஷெராஃபின் புகைப்படம் வெளியாகி கவனமீர்த்துள்ளது.


 






1987ஆம் ஆண்டு ’உத்தர் தக்‌ஷன்’ என்ற பாலிவுட் படத்தில் ரஜினிகாந்தும் ஜாக்கி ஷெராஃபும் இணைந்து நடித்த நிலையில், தற்போது 36 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.


இந்நிலையில், ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அப்டேட்டுகளாக பகிரப்பட்டு வரும் இந்தப் புகைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகின்றன.


மேலும் கோலிவுட், டோலிவுட், பாலிவுட், கன்னட, மலையாள சினிமாக்கள் என அனைத்து மொழிகளின் உச்ச நட்சத்திரங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதால் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் ஆழ்ந்துள்ளனர்.


ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இதுவரை 70 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில்,  வரும் மே மாதம் அல்லது தீபாவளிக்கு இப்படம் ரிலீசாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தான், ஜெய்சால்மரில் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: T. P. Gajendran: ”எனது கல்லூரித் தோழர் டி.பி.கஜேந்திரன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது” - முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல்!