தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவான “ஜெயிலர்” படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் வெளியானது.  நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்திருந்தது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, ரித்விக், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் வர்மா, ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு, சுனில் என  முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ஜெயிலர்  படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். 


முன்னதாக பாடல்கள், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா என ஜெயிலர் படம் மீதான எதிர்பார்ப்பு எகிறத்தொடங்கிய நிலையில் டிக்கெட் முன்பதிவிலும் சாதனை படைத்தது. தொடர்ந்து விடுமுறை தினங்களாக வந்ததால் ஜெயிலர் படம் வசூலில் சாதனைப் படைத்தது. கிட்டதட்ட ரூ.525 கோடி வரை அதிகாரப்பூர்வமாக படம் வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வசூல் தற்போது கிட்டத்தட்ட ரூபாய் 600 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் காவேரி கலாநிதி மாறன் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல தனியார் மருத்துவமனையான அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் ரூபாய் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இது வரும் ஆண்டுகளில் 100 ஏழை குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளது. 




கொண்டாட்டத்தில் படக்குழு 


ஏற்கனவே ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் கடந்த வாரம் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து சம்பளத் தொகையை காசோலையாக வழங்கினார். மேலும் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை பரிசாக வழங்கி ரஜினியை திக்குமுக்காட வைத்தார் கலாநிதிமாறன். இதேபோல் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கும் காசோலையும், கார் ஒன்றையும் வழங்கினார். இதன் வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனிடையே ஜெயிலர் படத்தில் பணியாற்றிய  மற்றவர்களுக்கு எதுவும் இல்லையா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.  


அனிருத்தை சந்தித்த கலாநிதி மாறன், 3 கார்களை நிறுத்தி விருப்பப்பட்ட காரை தேர்வு செய்ய சொன்னார். அதில் அனிருத்திற்கு பிடித்த காரின் சாவியை வழங்கிய கலாநிதி மாறன் நன்றி தெரிவித்து கொண்டார். வீடு தேடி வந்து காரை பரிசாக வழங்கி அனிருத்தை உற்சாகப்படுத்தியுள்ளார். 


ஆக்‌ஷன் அதிரடிகளை கொண்ட ஜெயிலர் படத்தில் தலைவரு அலப்பறை பாடல் ஒவ்வொரு ரஜினி ரசிகர்களையும் கொண்டாட வைத்ததுடன், டிரெண்டிங்கிலும் உள்ளது. படத்தின் கூஸ்பம்ப் இசைக்காகவும், பாடல்களின் வெற்றிக்காகவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனிருத்திற்கு உயர் ரக கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படத்துக்காக ரஜினி, நெல்சன், அனிருத் என ஒவ்வொருவரும் கோடிகளில் விலை மதிப்புள்ள காரை பரிசாக பெற்று வருவது திரைத்துறை வட்டாரத்தில் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.