சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் ஷோகேஸ் (ட்ரெய்லர்) இன்று மாலை ஆறு மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


ஜெயிலர்


நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.


இன்று வெளியாகும் ஷோகேஸ்






வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருக்கும் ஜெயிலர் படத்தின் ஷோகேஸ் இன்று மாலை ஆறு மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஷோகேஸ் என்று படக்குழு குறிப்பிட்டுள்ளது ட்ரெய்லரைதான் என்று எதிர்பார்க்கலாம். சமீப காலமாக படங்களின் ட்ரெய்லர்களை வெவ்வேறு பெயர்களில் குறிப்பிட்டு வெளியிடுவது வழக்கமாகி வருகிறது. முன்னதாக அட்லீ இயக்கி ஷாருக்கான் நடித்திருக்கும்  ஜவான் திரைப்படத்தின் ட்ரெய்லரை ப்ரிவியூ என்று குறிப்பிட்டு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஒரே சமயத்தில் பல்வேறு படங்களின் ட்ரெய்லர் வெளியிடப்படுவதால் தங்களது படங்களின் புரோமஷன்களுக்காக இதுமாதிரி தனித்துவமான பெயர்களில் ட்ரெய்லர்களை படக்குழு வெளியிடத் தொடங்கியுள்ளன என்று அனுமானிக்கலாம்.


டிரெண்டாகிய பாடல்கள்


ஜெயிலர் படத்தின் அனைத்துப் பாடல்களும் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் பாடல்கள் தர்போது டிரெண்டிங்கில் இருந்து வருகின்றன. குறிப்பாக இரண்டு பாடல்கள். தமன்னா இடம்பெற்றிருக்கும் காவாலா பாடல் தமிழில் மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் டிரெண்டாகி இருக்கிறது. இதனை அடுத்து ஹுக்கும் பாடல் ரஜினி ரசிகர்களிடம் பரவலாக கேட்கப்படும் பாடலாக மாறியுள்ளது.


அதிகரிக்கும் எதிர்ப்பார்ப்பு


ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. இதற்கும் முக்கிய காரணம் ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு நிகழ்வில் படம் மற்றும் இயக்குநர் நெல்சன் குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது இதுதான். ”முத்துராமன், மகேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா, பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ் போன்ற இயக்குநர்கள் என் கேரியரை உயர்த்தியவர்கள்; இப்போது நெல்சனும் இந்தப் பாதையில் இருக்கிறார்” என  நெல்சன் குறித்து அவர் பேசினார். மேலும் இந்தப் படம் பாட்ஷா மாதிரி இருக்குமா என்று தெரியவில்லை ஆனால் பாட்ஷாவுக்கும் மேலே இருக்கும் என்று ரஜினி பேசியது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்துள்ளது.