நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சுனில், வசந்த் ரவி, விநாயகன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கடந்தாண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கிய படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தடுத்து படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூலை 6 ஆம் தேதி ஜெயிலர் படத்தில் இருந்து முதல் பாடலாக ‘காவாலா’ பாடல் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது.
வழக்கம்போல நெல்சன் தனது ஜாலியான ஸ்டைல் வீடியோ மூலம் பாடல் வெளியாவதை அறிவித்தார். அந்த வீடியோவில் அனிருத்திடம் அவர் ஃபர்ஸ்ட் சிங்கிளை கேட்டு போராடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. பாடலாசிரியரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் எழுதிய இந்த பாடலை ஷில்பா ராவ் பாடியிருந்தார். இந்த பாடல் வெளியான பிறகு ஏராளமானோர் காவாலா பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ செய்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர். இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஹூக்கும்’ என தொடங்கும் இரண்டாவது பாடல் வரும் ஜூலை 17 ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஜெயிலர் பற்றி சில தகவல்கள்
- கடந்தாண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
- செப்டம்பர் மாதம் படத்தில் இடம் பெற்றுள்ள தீம் மியூசிக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளன்று ரஜினியின் கேரக்டரான முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் தோற்றம் அறிமுகம் செய்யப்பட்டது.