கல்லூரி காலத்தில் கற்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு முக்கியமானது நாம் கற்ற திறன்களை/ அறிவை வெளிப்படுத்தத் தெரிந்து கொள்வது. என்னதான் நாம் புத்திசாலியாக, கற்று தெளிந்தவராக இருந்தாலும் அதை வெளிக்காட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.


இன்னொருவர் முன்னிலையில் தெளிவாக, புரியும் வகையில் பேச வேண்டும். பொது மொழியான ஆங்கிலத்தைத் தயக்கம் இல்லாமல், பேசிப் பழக வேண்டும். தொழில்நுட்ப ரீதியாகத் திறமையானவராக இருந்தாலும், உடை, பேச்சு ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். 


படித்து முடித்துவிட்டு, வேலைக்குத் தயாராகும்போது அதற்கு முதன்முதலாக நாம் செய்ய வேண்டியது ரெஸ்யூம் தயார் செய்வதுதான். அதற்கு முன்னதாக, படிக்கும்போதே இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறலாம். அதற்கும் ரெஸ்யூம் தேவை என்பதால், அதைத் தயாரிக்க வேண்டியது முக்கியம்.


உங்களின் வேலை பிடித்துப்போனால், இன்டர்னாக நீங்கள் பயிற்சி பெறும் நிறுவனமே, உங்களை முழு நேர ஊழியராக வேலைக்கு எடுத்துக் கொள்ளவும் வாய்ப்புண்டு. அதனால் கவனமாகவும், திறமையாகவும் ரெஸ்யூமைத் தயாரித்து நேர்காணலைத் தயார் செய்ய வேண்டும்.  


இன்டர்ன்ஷிப் எனப்படும் உள்ளகப் பயிற்சிக்குத் தயாராக ஒரு ரெஸ்யூமைத் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


நகல் எடுக்கக்கூடாது 


ஒருவரின் ரெஸ்யூமைப் பார்த்து கிரகித்துக் கொள்ளலாமே தவிர, அதில் உள்ளவற்றை அப்படியே காப்பி அடித்து, எழுதக் கூடாது. முடிந்த அளவு பழைய ஃபார்மேட்டுகள் பயன்படுத்துவதைத் தவிர்த்து, புதிய டெம்ப்ளேட்டுகளைப் பயன்படுத்தி, ரெஸ்யூமை உருவாக்கலாம். அவை பார்க்கப் புத்துணர்ச்சியை அளிப்பதோடு, படிக்கும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும். 


வேலை விவரங்கள் மதிப்பாய்வு (Review the job description)


முதலில் நாம் உள்ளகப் பயிற்சி எடுக்க வேண்டிய வேலை பற்றிய விவரங்களை ஆய்வு செய்ய வேண்டியது முக்கியம். அதன் தேவையை உணர்ந்து அதற்கேற்ற வகையில் ரெஸ்யூமைத் தயாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வேலை குறித்த விவரங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு, அதற்கேற்ப உருவாக்க வேண்டும். 
  
வேலை நிறுவனங்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்


நாம் எந்த நிறுவனத்தில் உள்ளகப் பயிற்சி எடுக்கப் போகிறோம்? நிறுவனத்தின் தேவைகள் என்ன? என்பன குறித்துத் தெரிந்துகொண்டு ரெஸ்யூமைத் தயாரிக்க வேண்டும். 


பெயர், தொடர்பு எண்


ரெஸ்யூமில் எது இருக்கிறதோ, இல்லையோ பெயர் மற்றும் தொடர்பு எண் கட்டாயம் இருக்க வேண்டும். அதன் மூலமே சம்பந்தப்பட்ட நிறுவனம் உங்களைத் தொடர்புகொள்ள முடியும். 


திறன்களை முன்னிலைப்படுத்துங்கள் (Highlight your skills)


உங்களிடம் என்னவெல்லாம் திறமை இருக்கிறது என்பதை சுருக்கமாக, அதே நேரத்தில் சுவாரசியமாக எழுதுங்கள். அவை சார்ந்தே நேர்காணல்களில் கேள்விக் கணைகள் தொடுக்கப்படலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.


முந்தைய பணி அனுபவங்களைச் சேருங்கள் (work experience) 


ஏற்கெனவே ஏதாவது நிறுவனங்களில் உள்ளகப் பயிற்சி பெற்றிருந்தால், மறக்காமல் அதையும் ரெஸ்யூமில் சேருங்கள். அவை கூடுதல் மதிப்பை உங்களுக்கு அளிக்கும். அவை சார்ந்துகூட உங்களின் அடுத்த உள்ளகப் பயிற்சி அமைய வாய்ப்புண்டு. 


சாதனைகளை வெளிச்சமிட்டுக் காட்டுங்கள் (Describe your achievements)


உங்களின் சாதனைகளை நீங்கள்தான் வெளியே சொல்ல வேண்டும். அதே நேரத்தில் அது பெருமை பேசுதலாக இல்லாமல், திறமைகளை வெளிக் காட்டும் விதமாக அமைய வேண்டும். படிப்பு தாண்டி பிற கலைகளில் உங்களுக்கு உள்ள ஆர்வம், அதில் நீங்கள் நிகழ்த்திய சாதனைகள் ஆகியவற்றை வெளிச்சமிட்டுக் காட்டுங்கள்.


கல்வித் தகுதி முக்கியம் (educational qualification)


நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்பதைக் குறிப்பிட வேண்டியதும் முக்கியம். அதுவே வேலைக்கான / உள்ளகப் பயிற்சிக்கான அடிப்படைத் தகுதி உங்களுக்கு  இருக்கிறதா என்பதை நிறுவனங்கள் கண்டறிய உதவும்.


குறிக்கோளைக் குறிப்பிடுங்கள் (objective statement)


இதில் உங்களின் கேரியர் இலக்குகளையும் குறிக்கோளையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அதேபோல நீங்கள் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், நிறுவனத்துக்கு என்ன பங்கை அளிப்பீர்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பயிற்சி மீதான உங்களின் ஆர்வம் மற்றும் அறிவு குறித்தும் குறிப்பிட வேண்டியது முக்கியம். 


இவை அனைத்தையும் கொண்டு, ரெஸ்யூம் செய்தால், வெற்றியும் வேலையும் நிச்சயம்.