இயக்குநரும் நடிகருமான ஜி. மாரிமுத்து இறப்பு தென் இந்திய திரையுலகப் பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் அவரது குடும்பத்திற்கு தங்களது இறங்களைத் தெரிவித்து வர மாரிமுத்து பற்றிய பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள். 


மாரிமுத்து


இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (56) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. ‘பரியேறும் பெருமாள்’,  ‘கொம்பன்’ ‘ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது.  இவர் ‘கண்ணும் கண்ணும்’ மற்றும் ‘புலி வால்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். 


சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார். 


இன்று காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பணியில் பேசிக்கொண்டிருந்தபோது நடிகர் மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக சீரியல் ஊழியர்கள் அருகில் இருந்த சூர்யா ஆஸ்பத்திரிக்கு மாரிமுத்து கொண்டு செல்ல, நெஞ்சு வலி காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.  ஒரு மணி நேரம் கழித்து அவரது சொந்த ஊரான மதுரை தேனி வருச நாட்டுக்கு கொண்டு சென்றார்கள்.


இரங்கல் தெரிவித்த ரஜினிகாந்த்


 






மாரிமுத்து நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்தப் படத்தில் வில்லனாக நடித்த விநாயகனின் அடியாளாக நடித்திருப்பார் மாரிமுத்து. அவரது மறைவைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தில் அவர் நடித்த காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவரது இறப்பை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “ மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி.” என்று பதிவிட்டுள்ளார்.