நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


நெல்சன் இயக்கத்தில்  இந்தியாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர்.  கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் வரிசையில் நெல்சன் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் பல மொழி சூப்பர் ஸ்டார்களும் இணைந்து நடித்துள்ளனர். 


சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் அதற்கான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், நடிகைகள் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகிய ஹீரோயின்களும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், பிரபல தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் பிரபலம் ஜாக்கி ஷெராஃப் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. 


மேலும், யோகி பாபு, ஜாஃபர், விநாயகன், வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 


நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் கடலூர், வேலூர், ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, கொச்சி  என பல இடங்களில் நடைபெற்றது. 


இந்நிலையில், ஜெயிலர் பட ஷூட்டிங் நிறைவடைந்ததாக தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்த், தமன்னா, ஜாஃபர், இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடும் புகைப்படத்தை சன் பிச்சர்ஸ் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.  


 






இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக முன்னதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.


ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் அமிதாப் பச்சன் பங்கேற்க உள்ளதாக முன்னதாகத் தகவல் வெளியாகின. 


முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பாராட்டு விழா, மலேசியாவில் நடைபெற்ற எந்திரன் பட இசை வெளியீட்டு விழா ஆகியவற்றில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து அமிதாப் முன்னதாக கலந்துகொண்ட நிலையில், இந்த விழாக்களின் வரிசையில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவிலும் அமிதாப் பச்சன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.