ஜெயிலர் முதல் காட்சி பார்க்க படையெடுத்து வந்த பிரபலங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


'அண்ணாத்த' படத்துக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் இன்று உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.


நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, நடிகர்கள் மோகன் லால், சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, ஜீவிதா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள  நிலையில், விஜய் கார்த்திக் கண்ணன், ஆர் நிர்மல் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.  சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது. 


தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் ஜெயிலர் திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 10) வெளியாகியுள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படத்தைப் பார்க்க படையெடுத்து வருகின்றனர்.


ஜப்பான், ரஷ்யா என பல வெளிநாடுகளில் இருந்து ரசிகர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து வரும் நிலையில், பல  கோலிவுட் நட்சத்திரங்களும் தொடர்ந்து முதல் காட்சி பார்க்க வருகை தந்து வண்ணம் உள்ளனர். அதன்படி முன்னதாக நடிகர் ரஜினிகாந்தின் குடும்ப உறுப்பினர்கள் ரோஹிணி திரையரங்கில் ஜெயிலர் படம் பார்த்து ரசித்தனர்.


நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷூம் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், பொது நிகழ்ச்சிகள், விழாக்களில் இருவரும் ஒன்றாக வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும் குடும்ப உறுப்பினருமான தனுஷ் படம் பார்க்க ரோஹிணி திரையரங்குக்கு வருகை தந்தார்.


 






மேலும் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரது மகன்கள் யாத்ரா, லிங்கா, மதுவந்தி உள்ளிட்ட பலரும் படம் பார்த்து ரசித்ததுடன் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதேபோல் இசையமைப்பாளர் அனிருத் வெற்றி திரையரங்குக்கு வருகை தந்ததுடன் ஹூக்கும் பாடலைப் பாடி அங்கிருந்த ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.


 






இதேபோல் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் கவின், நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் சென்னை திரையரங்குகளில் முதல் காட்சி படம் பார்த்து மகிழ்ந்தனர்.