திரையுலகின் சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். கடந்த சில ஆண்டுகளாக அவரது ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக அவரது எந்த படமும் பெரிய வெற்றியடையவில்லை. இந்த நிலையில், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்.

Continues below advertisement

திரும்பும் இடமெல்லாம் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் வசூலைக்குவித்து வரும் ப்ளாக்பஸ்டர் படமாக ஜெயிலர் படம் அமைந்துள்ளது. தர்பார், அண்ணாத்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில் ஜெயிலர் படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்துள்ளதால் ரஜினிகாந்த் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

சிவராஜ்குமார்:

Continues below advertisement

இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு இணையாக மோகன்லாலும், சிவராஜ்குமாரும் நடித்துள்ளனர். மலையாள உலகின் பிரபல நடிகரான மோகன்லால் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான நடிகராக ஏற்கனவே உள்ளார். சிறைச்சாலை, ஜில்லா ஆகிய படங்கள் மூலமாகவும், புலிமுருகன், லூசிபர் ஆகிய படங்கள் மூலமாகவும் அவர் தமிழ்நாட்டில் ஏற்கனவே பிரபலமான நட்சத்திரமாக உள்ளார். ஆனால், கன்னட உலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவராஜ்குமார் தமிழ்நாட்டில் அந்தளவு பரிச்சயமில்லாத நடிகர் என்றே சொல்லலாம். 

பொதுவாக மலையாள, தெலுங்கு, இந்தி நடிகர்களை தெரிந்த அளவிற்கு கன்னட நடிகர்களை தமிழ்நாட்டில் யாருக்கும் அந்தளவுக்கு தெரியாது. அதற்கு அவர்களது வியாபாரமும் ஒரு காரணம்தான். கன்னட சூப்பர்ஸ்டாராக திகழ்ந்த மறைந்த நடிகர் ராஜ்குமார் மட்டுமே தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்த நடிகராக இருந்தார். ஆனால், கே.ஜி.எஃப். வெற்றிக்கு பிறகு கன்னட திரையுலகம் மீது மற்ற திரையுலகங்களும், அங்குள்ள ரசிகர்களும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஜெயிலர் தந்த செல்வாக்கு:

இந்த நிலையில், ஜெயிலர் படத்தில் நடித்ததன் மூலம் சிவராஜ்குமார் தமிழ்நாட்டிலும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகராக புகழ்பெற்றுள்ளார்.  கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகனாகிய சிவராஜ்குமார் 1974ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமானார். அதன்பின்பு 1986ம் ஆண்டு முதல் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அப்போது முதல் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பல ப்ளாக்பஸ்டர், மெகாஹிட் படங்களை அளித்து கர்நாடகாவின் உச்சநட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். தமிழில் உள்ள ஏராளமான படங்களின் கன்னட ரீ மேக்கில் நாயகனாகவும் நடித்து அங்கு வெற்றியும் பெற்றுள்ளார். அவரது படங்களும் இங்கு ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழ்நாட்டில் அந்தளவு பிரபலமான நடிகராக தெரியாத புனீத் ராஜ்குமாரின் சகோதரரான சிவராஜ்குமார், ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டிலும் பிரபலமான நடிகராக உருவெடுத்துள்ளார்.

ரசிகர்கள் தந்த வரவேற்பு:

அதுவும், கிளைமேக்ஸ் காட்சியில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரஜினியின் மருமகளை காப்பாற்ற வரும் காட்சியில், ரஜினிகாந்த் வில்லனிடம் ‘அங்க 3-வதா ஒருத்தன் இருக்கான் பாரு’ என்று கூறும்போது, சிவராஜ்குமாரின் என்ட்ரீ காட்சிகளில் திரையரங்கமே அதிர்ந்ததே அதற்கு சான்றாகும்.

டைகர் ஹூக்கும் பாடல் வரிகளுடன் சிவராஜ்குமார் வரும் அந்த காட்சி படத்தை கர்நாடகாவிலும் வெற்றிப்படமாக மாற்றிக்காட்டியுள்ளது. விக்ரம் படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் கதாபாத்திரம் எந்தளவு தமிழ் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அந்தளவிற்கு இந்த காட்சியும் ரசிகர்களை ஈர்த்துள்ளது என்றே கூறலாம்.

அடுத்தடுத்து கமிட்டாகும் சிவா:

தமிழில்  பத்து தல படத்தில் இடம் பெற்ற  சிம்புவின் ஏஜிஆர் கேரக்டரின்,  ஒரிஜினல் பதிப்பான கன்னட மொழியில் வெளியான மஃப்டி படத்தில் நாயகனாக நடித்தவர் சிவராஜ்குமாரே ஆவார். ஜெயிலர் படத்தின் மூலம் தமிழ்நாட்டில் தனக்கு கிடைத்த செல்வாக்கால் சிவராஜ்குமாரும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பள்ளி, கல்லூரி படிப்பை சென்னையில் முடித்த சிவராஜ்குமாரை இனி வரும் காலங்களில் தமிழ் படங்களில் அதிகளவில் காணலாம் என்று எதிர்பார்க்கலாம்.