ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளராக அறிமுகமாக இருக்கிறார் இயக்குநர் நெல்சன்.


நெல்சன்


சிலம்பரசனை வைத்து ‘வேட்டை மன்னன்’ திரைப்படத்தைத் தொடங்கி பின் பாதியில் அந்தப் படம் கைவிடப்பட்டது தான் இயக்குநர் நெல்சனின் திரைப்பயணத்திற்கான அறிமுகம். இதனைத் தொடர்ந்து நீண்ட காத்திருப்புக்குப் பின் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்கிற படத்தை இயக்கினார். கமர்ஷியல் சினிமாவில் நெல்சன் ஒரு ரவுண்டு வரப்போகிறார் என்று உறுதிப்படுத்தியது ‘கோலமாவு கோகிலா’. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் டாக்டர் திரைப்படமும் வெற்றி பெற்றது. இந்த  வெற்றி விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்கியது.


பீஸ்ட் படத்தின் தோல்வி


“யானைக்கும் அடி சறுக்கும்” என்பது போல் தன்னுடைய ஸ்டைலில் துணிச்சலாக படம் எடுத்து வந்த நெல்சன், தன்னுடைய ஸ்டைலையும் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் விஜய் படமாகவும் இல்லாமல் இரண்டிற்கும் நடுவில் கொஞ்சம் தத்தளித்து விட்டார்.


சினிமா, சின்ன தவறுகளை செய்து மீண்டும் அதை திருத்திக் கொள்ளும் வாய்ப்புகளை அதிகம் பேருக்கு வழங்குவதில்லை. ஆனால் நெல்சனுக்கு அந்த வாய்ப்பை ரஜினிகாந்த் வழங்கினார். இதற்காக அவரது பயணம் எளிதானதாக இருந்தது என்று சொல்வதற்கு இல்லை. பெரும் மன உளைச்சல்களை எதிர்கொண்டு ஜெயிலர் திரைப்படத்தை எடுத்து முடித்தார் நெல்சன்.


ஜெயிலர்


பீஸ்ட் படத்தின் தோல்வியின்போது ரஜினியிடம் இயக்குநரை மாற்றச் சொல்லி கேட்ட விநியோகஸ்தர்கள், இன்று அதே நெல்சனை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு ஜெயிலர் படத்தின் வெற்றி அமைந்துள்ளது. 600 கோடிகளுக்கும் மேலாக இந்தப் படம் உலக அளவில் வசூல் செய்தது.


அதிக வசூல் ஈட்டிய தமிழ் படங்களின் வரிசையில் தற்போது இரண்டாம் இடத்தில் நெல்சன் திலீப்குமார்  இயக்கிய ஜெயிலர் திரைப்படம் இடம்பிடித்துள்ளது. நெல்சன் லைட்டாக மனதுக்குள் ரஜினியின் படையப்பா வசனமான “ஒரு தடவ தான் தவறும்” என்று சொல்லிக்கொள்வாரோ என்னமோ!


கலைஞர்களை கெளரவித்த சன் பிக்ச்சர்ஸ்


இந்நிலையில், ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகிய மூவருக்கும் கோடிகள் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன். ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சனின் மார்கெட் பலமடங்கு உயர்ந்துள்ள நிலையில், தனது அடுத்த படத்தையும் சன் பிச்சர்ஸூடன் இயக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியானது. அனைவரும் அந்த அடுத்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்க, தற்போது ஆச்சரியான ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.


தயாரிப்பாளராகும் நெல்சன்






இந்தத் தகவலின் படி இயக்குநர் நெல்சன் தற்போது தயாரிப்பாளர் நெல்சனாக மாற இருக்கிறார். தனது உதவி இயக்குநர் சிவபாலன் என்பவரின் படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘டாடா’ படத்தில் நடித்த கவின் மற்றும்  நடிகை பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.