தமிழ் சினிமாவின் பிரபலமான இளம் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படமாக கடந்த வாரம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகெங்கிலும் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்திய படமாக வெளியான ஜெயிலர் தமிழகத்தில் மட்டும் 1200 திரையரங்குகளிலும் உலகளவில் சுமார் 7000 திரையரங்குகளிலும் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மிக பெரிய பொருட்செலவில் உருவான இப்படம் திரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல் வேட்டை :
தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, ரித்விக், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் வர்மா, ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகி பாபு, சுனில் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் ஆக்ஷன், காமெடி, ஸ்டைல் என பட்டையை கிளப்பி முதல் நாள் முதல் வசூல் வேட்டை செய்து வருகிறது. முதல் நான் ஓப்பனிங் மட்டுமே ரூ.20 கோடியை எட்டியது என கூறப்படுகிறது.
ரிப்பீடட் ஆடியன்ஸ்:
ரஜினியின் கடைசி படமான அண்ணாத்த சரியாக ஹிட்டாகாத நிலையில், கவலையில் இருந்த ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் வகையில் ஜெயிலர் படம் அமைந்துள்ளது. மேலும் மாஸான பழைய ரஜினிகாந்தை பார்த்தது போல இப்படம் அமைந்ததால் ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோஷத்தை கொடுத்தது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் என்பதால் ரசிகர்களை குடும்பம், குடும்பமாக தியேட்டருக்கு வரவைக்க காரணமாக அமைந்தது. மேலும் ரிபீடட் ஆடியன்ஸ் வருகையும் அதிகமாக உள்ளது.
விரைவில் 500 கோடி :
வெளியான நாள் முதல் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டிய ஜெயிலர் திரைப்படம் கடந்த இரண்டு நாட்களாக கொஞ்சம் டல்லாக இருந்து வருவதாகவும் வார இறுதி நாட்களில் மீண்டும் வசூல் எகிறும் என்றும் கூறப்படுகிறது. நேற்றைய நிலவரத்தின் படி உலகளவில் ரூ.375.40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.250 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது இன்னும் சில வாரங்களில் 500 கோடியை நெருங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
புதிய சாதனை :
சமீபத்தில் நடைபெற்ற நன்றி தெரிவிப்பு விழாவில் 'ஜெயிலர்' திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்றும் 1000 கோடி ரூபாய் வரை வசூலை குவிக்கும் என்றும் இயக்குநர் நெல்சன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் ரஜினிகாந்த் ரசிகர்களை உற்சாகத்தில் குதிக்க வைத்துள்ளது.