நெல்சன் இயக்கி ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் இன்று  திரையரங்குகளில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது . தனது கரியரில் மிக முக்கியமான திரைப்படமாக ஜெயிலர் படம் இருக்கும் என படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே ரஜினி குறிப்பிட்டிருந்தார். இந்த ஆண்டின் மிகப்பெரிய கலெக்‌ஷன் அள்ளும் படமாக ஜெயிலர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் படம் வெளியாவதற்கு முன்பாகவே வசூல் வேட்டையைத் தொடங்கியது படம்.


இந்தியா முதல் ஜப்பான் வரை


ரஜினி ரசிகர்கள் இந்தியா முதல் ஜப்பான் வரை உலகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள். ஒவ்வொரு ரஜினி படத்தையும் ஒன்று திரண்டு கோலாகலமாக அவர்கள் கொண்டாடுவது வழக்கம். தற்போது இன்று வெளியாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கான முன்பதிவுகள் மூலமாக ஏற்கெனவே அமெரிக்காவில் மட்டுமே மொத்தம் 6.66 கோடிகளுக்கு டிக்கெட் விற்பனையால் வசூல் ஈட்டியிருந்தது. சிரஞ்சீவி  நடிப்பில் உருவாகி இருக்கும் ‘போலா ஷங்கர்’ படத்தை பின்னுக்குத் தள்ளி டிக்கெட் விற்பனைகளில் சிகரம் தொட்டு வருகிறது ஜெயிலர்.


நிரம்பி வரும் இந்திய திரையரங்குகள்


 இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி கன்னடம் என அத்தனை மொழிகளிலும் வெளியாகியிருக்கும் ஜெயிலர் திரைப்படம், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் மட்டும் முன்பதிவின் மூலம் 8 கோடிகள் வசூல் ஈட்டியிருந்தது. இந்தியா முழுவதும் ஜெயிலர் திரைப்படம் 12.83 கோடிகளை முன்பதிவு வாயிலாக வசூல் செய்தது.


இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் இந்திய அளவில் முதல் நாளில் மட்டுமே 49 கோடிகளை வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு அதிக வசூல் ஈட்டிய இரண்டு படங்களான அஜித் குமாரின் ‘துணிவு’ மற்றும் விஜய் நடித்த ‘வாரிசு’ உள்ளிட்ட திரைப்படங்களின் முதல் நாள் வசூலை ஜெயிலர் மிக எளிதாகக் கடந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் 25 கோடிகளையும், கர்நாடகாவில் 11 கோடிகளையும், கேரளாவில் 4 கோடிகளையும் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 7 கோடிகளையும், சேர்த்து மொத்தம் இந்தியா முழுவதும் 49 கோடிகளை ஜெயிலர் திரைப்படம் வசூலிக்கும் என பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் sacnilk தளம் பகிர்ந்துள்ளது.




இந்த பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை  விடக் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ கூட ஜெயிலர் படம் வசூலிக்கலாம். படக்குழு இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல்களை இதுவரை பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பாலிவுட்டை அசைக்குமா ஜெயிலர்?


பாலிவுட்டில் வெளியாக இருக்கும் அக்‌ஷய் குமார் நடித்திருக்கும் படமான ஓ.எம்.ஜி 2 மற்றும் சன்னி தயாளின் ‘கத்தர் 2’ ஆகிய படங்கள் வெளியாவதால் ஜெயிலர் திரைப்படம் பாலிவுட்டில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்பட்டாலும், படத்திற்கு அதிகரித்து வரும் பாராட்டுக்களை ப்பார்த்து இனி வரும் நாட்களில் படத்திற்கான திரையிடல்கள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


ஜெயிலர்


சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் ஜெயிலர்  தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷ்ராஃப், விநாயகன், யோகிபாபு, ஷிவ ராஜ்குமார் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.