நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் 500 கோடிகள் வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
500 கோடி க்ளப்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா திரைப்படமாக கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.
தமிழ்நாட்டில் சுமார் 1200 திரையரங்குகளிலும் உலகளவில் சுமார் 7000 திரையரங்குகளிலும் ஜெயிலர் வெளியான நிலையில், உலகம் முழுவதுமுள்ள ரஜினிரசிகர்கள் விழா மோடுக்கு சென்றனர்.
தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப் , சுனில், வசந்த் ரவி, யோகிபாபு, விநாயகம், என பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் ஆக்ஷன், காமெடி, மாஸ் என பக்கா கமர்ஷியல் படமாக வெளியான ஜெயிலர் முதல் நாள் முதலே வசூலைக் குவித்து வருகிறது.
பொன்னியின் செல்வன ஓவர்டேக் பண்ணியாச்சு
மேலும் வயதுக்கேற்ற கதாபாத்திரத்திலும், அதே நேரத்தில் பழைய ரஜினியை நினைவூட்டும் மாஸ் காட்சிகளுடனும் ஜெயிலர் அமைந்திருந்த நிலையில், குடும்ப ஆடியன்ஸையும் இப்படம் கவர்ந்து லைக்ஸ் அள்ளியது.
இந்நிலையில், முன்னதாக உலகளவில் ரூ.375.40 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக ஆகஸ்ட் 17ஆம் தேதி சன் பிச்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தொடர்ந்து இரண்டாவது வார இறுதியிலும் ஜெயிலர் திரைப்படம் தனி ஆளாக வசூலைக் குவித்து வந்த நிலையில் விரைவில் 500 கோடிகள் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் 11ஆவது நாளான இன்று 500 கோடிகள் வசூலைத் தாண்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் இரண்டாவது படம்!
ஏற்கெனவே நடிகர் ரஜினிகாந்தின் 2.0 படம் 500 கோடிகளுக்கு மேல் வசூலித்த நிலையில், ஜெயிலர் திரைப்படம் 500 கோடி வசூலித்த ரஜினியின் இரண்டாவது படமாக உருவெடுத்துள்ளது.
மேலும் சென்ற ஆண்டு 487.50 கோடிகள் வசூலை வாரிக் குவித்து சென்ற ஆண்டு சாதனை படைத்த பொன்னியின் செல்வன் படத்தின் வசூலை ஜெயிலர் முறியடிக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , அந்த சாதனையையும் ஜெயிலர் தற்போது கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் sacnilk தளம் ஜெயிலர் திரைப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் 307 கோடிகளை வசூலித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், சன் பிச்சர்ஸ் நிறுவனம் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் வசூல் சாதனைகளுக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் மற்றொருபுறம் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் நேற்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அவரது காலைத் தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்றது இணையத்தில் பேசுபொருளாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.