Crime: உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய தம்பதியரை 3 பேர் கொண்ட கும்பல் அடித்தே கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் கொடூரங்கள்:
சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய கொடூரங்கள், மதக் கொடூரங்கள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, தலித் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்து வருகிறது. சமீபத்தில் கூட, மத்திய பிரதேசத்தில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒருவர் மீது, பாஜக நிர்வாகி சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. தற்போது உத்தர பிரதேசத்தில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்து பெண்ணிடம் காதல்:
உத்தர பிரதேச மாநிலம் சீதாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ். இவரது மனைவி கம்ருல் நிஷா. இந்த தம்பதிக்கு ஷௌகத் என்ற ஒரு மகன் உள்ளார். இளைஞர் ஷௌகத் அதே பகுதியைச் சேர்ந்த ரூபி என்ற இந்து பெண்ணுடம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் 2020-ஆம் ஆண்டில் இருந்தே காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த விஷயம் இருவீட்டாருக்கும் தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இளைஞர் ஷௌகத் மற்றும் ரூபி அவர்களது வீட்டில் பேசி பார்த்தும் அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் இரண்டு வீட்டாருக்கும் சண்டை ஏற்பட்டது. கடந்த 2020-ஆம் ஆண்டில் இரண்டு பேரும் வீட்டில் இருந்து சென்றுவிட்டனர். இதனை அடுத்து, இருவீட்டாரும் அவர்களை தீவிரமாக தேடி கண்டுபிடித்தனர். அந்த நேரத்தில் ரூபி மைனர் என்பதால் ஷௌகத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், கடந்த ஜூன் மாதம் சிறையில் இருந்து ஷௌகத் வெளியே வந்தார்.
அடித்துக் கொல்லப்பட்ட தம்பதியினர்:
சிறையில் இருந்து வெளியே வந்த ஷௌகத் ரூபியை சந்தித்து பேசி வந்துள்ளனர். மீண்டும் இரண்டு பேரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த ரூபியின் குடும்பத்தினரின் ஷௌகத் பெற்றோரிடம் சண்டை போட்டனர். இதனால் ஷௌகத் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். அதனை கேட்காமல் மீண்டும் ஷௌகத், ரூபியிடம் பழகி வந்துள்ளார்.
பின்னர், ஷௌகத் மற்றும் ரூபியும் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். இதனை அடுத்து, மீண்டும் இருவீட்டாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் ஷௌகத் பெற்றோரை 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அடித்துள்ளது. அவர்கள் வலி தாங்க முடியாமல் கத்தினர். இருப்பினர், அவர்களை தொடர்ந்து அடித்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.