ஜெயிலர் 2 ஆம் பாகத்திற்கான திரைக்கதையை நெல்சன் திலிப்குமார் எழுதி வருவதாக நடிகை மிர்ணா மேனன் தெரிவித்துள்ளார்.


ஜெயிலர்


ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானப் படம் ஜெயிலர். நெல்சன் திலிப் குமார் இயக்கி ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், தமன்னா, சுனில் குமார், மம்மூட்டி , ஷிவராஜ் குமார் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்திருந்தது.


பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலிப்குமார் கடுமையான விமர்சங்னகளால் தாக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தை அவர் இயக்கும் வாய்ப்பும் கிட்டதட்ட கையை விட்டு நழுவ இருந்தது. ரஜினிகாந்த் நெல்சன் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு ஏற்றபடி ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் 600 கோடி ரூபாய் வசூல் எடுத்தது. தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் , கன்னடன் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் ரஜினி , மம்மூட்டி மற்றும் ஷிவராஜ்குமார் ரசிகர்களால் கொண்டாடப் பட்டது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சன்  பிக்ச்சர்ஸ் நிறுவனம் இயக்குநர் நெல்சன் , நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அனிருத் ஆகிய மூவருக்கும் கோடிகள் மதிப்பிலான சொகுசு கார்களை பரிசாக வழங்கியது. மேலும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தங்க நாணையம் பரிசாக படத்தின் வெற்றிவிழாவில் வழங்கப் பட்டது


ஜெயிலர் 2






ரஜினிகாந்த் அடுத்து  நடிக்க இருக்கும் தலைவர் 171 படத்தையும் சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது. இந்தப் படத்தை  லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில்  நெல்சன் திலிப்குமார் மீண்டும்  ரஜினியுடன் படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகின. இந்தப் படம் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் யூகித்து வந்தார்கள்.இப்படியான நிலையில் இந்த தகவலை நடிகை மிர்ணா மேனன் உறுதிப்படுத்தியுள்ளார்.


நேர்காணல் ஒன்றில் ஜெயிலர் 2 பற்றி கேள்வி எழுப்பப் பட்டபோது பதிலளித்த அவர் தற்போது நெல்சன் ஜெயிலர் 2 படத்தின் திரைக்கதையை எழுதி வருவதாகவும் வருவதாகவும் அந்தப் படத்தின் அதிகாரப் பூர்வமான தகவலுக்காக தானும் காத்திருப்பதாகவும் அவர் தெடிவித்துள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.


வேட்டையன்


தற்போது ரஜினி த.செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் லோகேஷ் கனகராஜுடனான அடுத்தப் படத்திற்கு அவர் தயாராகி வருகிறார்.