ஜெய் பீம் திரைப்படம் தமிழில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. படம் வந்த பிறகு அதனை பார்த்த அனைவரும் இதுபோல் இனி ஒரு படம் வராது என்று உச்ச முகர்கின்றனர். படத்தை தயாரித்து அதில் நடித்த சூர்யாவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு வசனமும் ரசிகர்களின் உணர்வுகளை அசைத்து பார்த்தது. குறிப்பாக, ஐஜி கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரகாஷ் ராஜிடம் சேட் கதாபாத்திரம் ஒருவர் ஹிந்தியில் பேசுவார். அப்போது பிரகாஷ் ராஜ் அவரது கன்னத்தில் அறைந்து, ‘தமிழில் பேசு’ என்பார். இந்தக் காட்சி படு வைரலானது.
மேலும் இந்தக் காட்சி தேவையில்லாதது என சமூக வலைதளங்களில் ஹிந்தி ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். அதேசமயம், ஹிந்தியில் வெளியான 'Scam 1992' வெப் சீரிஸில் விசாரணை அதிகாரி ஒருவரிடம் வங்கி ஊழியர் தமிழில் பேசும்போது, ‘ஹிந்தியில் பேசு’ என்ற வசனம் வரும்.
ஜெய் பீம் காட்சியை விமர்சனம் செய்பவர்கள் அப்போது எங்கே போனார்கள் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
இந்நிலையில், இக்காட்சி குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், “1990களின் கதைக்களத்தில் ஜெய் பீம் படம் எடுக்கப்பட்டிருக்கும். அப்போது ஹிந்தியை திணிக்கும் விதமாக பேசினால் அப்படித்தான் காவல் அதிகாரி நடந்துகொள்வார்.
பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக சந்தித்துவரும் உண்மையான பிரச்சனையை பற்றி தைரியமாக படத்தில் பேசியுள்ளனர். அடிதட்டு மக்களின் துயர நிலை அவர்கள் படும் துன்பங்கள் எதுவுமே இவர்கள் கண்களுக்கு படவில்லை அந்த ஒற்றை அறைதான் தெரிகிறது என்கிறபோதே அவர்களின் நிலைப்பாடு புரிகிறது
ஹிந்தியில் பேசும்போது தமிழில் பேசு என கன்னத்தில் அறையும் காட்சியில் என் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதில்லை” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்