தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து முன்னணி நகைச்சுவை நடிகரானவர் சந்தானம். நகைச்சுவை மன்னன் கவுண்ட மணி அதிகம் சினிமாவில் நடிப்பதை விட்டு விட்ட நிலையில், அவரின் பாணியில் நகைச்சுவை கையில் எடுத்து வேகமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். ஒரு கட்டத்தில் சந்தானத்தின் வளர்ச்சி அபார வளர்ச்சியாக இருந்தது. முன்னணி நடிகர்கள் தங்களின் படங்களில் சந்தானம் நடிக்க வேண்டும் என்று இயக்குநர்கள் கேட்டெல்லாம் வாங்கியுள்ளனர். சில நடிகர்களின் படங்கள் சந்தானத்திற்காக ஓடியும் இருந்துள்ளது.
சாதாரண நடிகராக இருக்கும்போது, சந்தானம் யார் என்று தெரியாமல் இருந்தார். குறிப்பாக சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூரைச் சேர்ந்தவர் சந்தானம் என்று சினிமாவை சேர்ந்தவர்களுக்கு தெரிந்திருக்கும். சினிமாவில் பணம், புகழும் சேர சேர சந்தானம் தனக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.
சந்தானம் பின்னாடி ஒரு கூட்டம் உருவானபிறகு, அவர் தன்னை அடையாளப்படுத்தி கொள்வதற்காக தான் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்று பட்டும் படாமல், காட்டிக்கொண்டார். இப்படி இருந்த சந்தானம், தான் வன்னியர் பின்புலம் கொண்டவர் என்று மற்றவர்களுக்கு தெரியவந்தது பாஜக பிரமுகர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலுக்கு பின்பே.
கடந்த 2017ஆம் ஆண்டு பாஜக பிரமுகர் பிரேம் ஆனந்துக்கும், நடிகர் சந்தானத்துக்கும் இடையே ஏற்பட்ட கொடுக்கல், வாங்கல் பிரச்னையின்போது, இருவரின் தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதில், பிரேம் ஆனந்தை சந்தானம் தாக்கியதாக அவர் மீது வழக்குப் பதிவு எல்லாம் செய்யப்பட்டது. அப்போது, தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தராஜன் சந்தானம் தரப்பில் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். சந்தானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக போஸ்டர் எல்லாம் ஒட்டியது.
இந்த சம்பவத்திற்கு பிறகுதான், நடிகர் சந்தானத்திற்கு ஆதரவாகவும், பின்புலமாகவும் வன்னியர் சங்கம் இருக்கிறது என்று தெரியவந்தது. சந்தானத்தை பாஜக கண்டித்த சில நேரங்களில், சந்தானத்தை ஆதரித்து வன்னியர் சங்கம் போஸ்டர் ஓட்டியது. போஸ்டரில் வன்னியர் சங்கம் சந்தானத்திற்கு என்றும் துணை நிற்கும் என்று கூறப்பட்டத்தை தொடர்ந்து, சந்தானம் வன்னியர் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டார். சந்தானத்தை எந்தவொரு வட்டத்திற்குள்ளும் பார்க்காமல், அவரை நகைச்சுவை நடிகராக பார்த்து ரசித்த ரசிகர்கள், அவர் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்று அறியப்பட்டார்.
இதனிடையே, படங்களில் ஹீரோவாக பிஸியாக நடித்துகொண்டிருக்க, தான் நடிக்கும் படங்களில் பேசும் வசனங்களுக்கும், காட்சிகளுக்கும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டும் வந்தார். இப்படி சந்தானத்தின் திரை வாழ்க்கை சென்றுக்கொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள், சத்குரு ஜக்கி வாசு தேவிற்கு ஆதரவாக குரல் கொடுக்க, சங்கி சந்தானம் என்று நெட்சன்கள் டுவிட்டரில் டிரெண்டை உருவாக்கினார்கள்.
இந்த நிலையில், நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸின் மகளின் திருமண நிகழ்ச்சியில் சந்தானம் கலந்துகொண்டார். அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்தப் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த சந்தானம், ‘எங்கள் குடும்ப திருமணத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அய்யாவை சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டிருந்தது வைரலானது. அப்போது, சந்தானம் வன்னியர் ஆதரவாளர் என்று அனைவருக்கும் தெரியவந்தது.
சந்தானம் தான் தீவிர வன்னியர் ஆதரவாளர் என்று, அவர் நடித்த ‘சபாபதி’ பட நிகழ்ச்சியில் பட்டும் படாமல் காண்பித்திருப்பார். தமிழ்நாடே ஜெய்பீம் படம் விவகாரத்தில் பரபரப்பாக இருந்த நிலையில், அப்படத்திற்கும், சூர்யாவுக்கும் எதிராக வன்னியர் சமூகத்தினர் ஒன்று திரள, அதே சினிமாவில் இருக்கும், சந்தானம் சினிமாவைச் சார்ந்த ஒருவருக்கு வெளிப்படையாக ஆதரவளிக்காமல், அவர் சார்ந்த சமூகத்திற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்திருந்தார். அதன்பிறகு , சாதிவெறி சந்தானம் என்று டுவிட்டரில் டிரெண்டானது, பின்னர் சந்தானத்துக்கு ஆதரவாக Westandwithsanthanam என்னும் ஹேஷ்டேக்கும் டிரெண்டானது.
தமிழ் சினிமா ரசிகர்கள் சந்தானத்தை நகைச்சுவை நடிகராக மட்டுமே என்று எண்ணுகின்றனர். சமூகவலைதள பக்கங்களில் தலைக்காட்டாத வெகுஜென மக்களுக்கு அவர் ஒரு நடிகர் என்றே அறியப்படுகிறார். அதுபோலவே, சந்தானம் இருக்க வேண்டும் என்றும் நடுநிலையான ரசிகர்கள் விரும்புகிறார்கள்.