ஜெய்பீம்... தமிழ் சினிமா தற்போது கொண்டாடிக்கொண்டிருக்கும் படம். கொண்டாட வேண்டிய படம். அதிகார வர்க்கத்திற்கு எதிராக எப்போதாவது சுழற்றப்படும் சாட்டையின் சமீபத்திய வரவு ஜெய்பீம். அதனால் அதிகார வர்க்கங்கள் கூட அதை வரவேற்கின்றன. ஒரு படம் வெளியாகும் போது, அதன் சாதக, பாதகங்கள் பொதுவாக ஒப்பீடு செய்யப்படும். அந்த வகையில் ,ஜெய்பீம் படத்தின் சாதகங்கள் பலவற்றை ஊடக உலகம் கொண்டாடுகிறது. நாமும் தான். அதே நேரத்தில் படத்தில் பாதகம் என்று சொல்ல முடியாது... ஆனால் வணிக ரீதியான சிந்தாந்தம், ஜெய்பீம் படத்திலும் இருந்திருக்கிறது. சினிமா ஒரு தொழில், அதில் அது இருப்பதில் தவறில்லை தான். 

Continues below advertisement

அப்படி பார்க்கும் போது, ஜெய்பீம் படத்தில் பலரின் பாராட்டையும், கவனத்தையும் பெற்ற ஒரு காட்சி தான் தற்போது விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது. விசாரணை தனி அதிகாரியான பிரகாஷ் ராஜ், நகைக்கடை சேட் ஒருவரிடம் விசாரிக்க செல்லும் போது, அந்த சேட் இந்தியில் பேசுவார். அப்போது அவரது கன்னத்தில் அறையும் பிரகாஷ்ராஜ், ‛தமிழ்ல பேசுடா...’ என்பார். தமிழ்நாட்டில் தமிழில் பேசு என்பது தான் அதன் பொருள். அப்படி தான் இங்கு புரிந்து கொள்ளவும் பட்டது. அதனால் தான் அந்த காட்சி சிலாகிக்கவும் பட்டது. 

Continues below advertisement

சரி அதே படம் தானே... தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, கன்னடா, மலையாளம், இந்தி என பிற மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது என்று, இந்தியின் போய் பார்த்தால் நிலைமையே வேறு மாதிரி இருக்கிறது. அதே காட்சி, அதே விசாரணை, அதே அதிகாரி, அதே சேட், ஆனால்... ‛டயலாக்’ மட்டும் வேறு....! என்ன நடந்தது என பிரகாஷ் ராஜ் கேட்க, அதே சேட் அதற்கு பதிலளிக்கும்போது, திடீரென பளார் விழுகிறது. ‛எதுக்கு சார் அடிக்கிறீங்க...’ என சேட்  கேட்க, ‛உண்மையை சொல்றா...’ என்கிறார் பிரகாஷ் ராஜ். ‛தமிழில் பேசுடா...’ என்பது, இந்தியில் ‛உண்மையை சொல்லுடா...’ என்று மாறிவிட்டது. ஏன் இந்த மாற்றம்... ஒரு சம்பவம்... அதுவும் உண்மை சம்பவம்... அதில் நடந்ததை அப்படியே தானே காட்சிப்படுத்த வேண்டும். அது தானே முறை. ஏன் அங்கு சமரசம் செய்தது, ஜெய்பீம்? 

வேறு என்ன.... வியாபாரம் தான்....! இதற்கு முன் எத்தனையோ படங்கள் இந்தியில் இருந்து, தமிழுக்கும், தமிழில் இருந்து இந்திக்கோ அல்லது வேறு சில மொழிகளுக்கோ செல்லும் போது, அங்கு இது போன்ற சமரசங்கள் இருந்திருக்கிறது. அதுவும் தொழில் சார்ந்த சமரசம் தான். ஆனால், சமரசம் இல்லாமல் ஒரு அநீதியை எடுத்துரைத்த படத்தில், வணிகத்திற்காக ஏன் இந்த சமரசம் செய்யப்பட்டது என்பது தான் இங்கு கேள்வி. உண்மையில் அந்த டயலாக் இடம் பெற்றிருந்தால் அது பெரிய எதிர்ப்பலையை அங்கு ஏற்படுத்தியிருக்கும். அது படத்தை வெளியிட்ட அமேசான் போன்ற பெரிய நிறுவனத்தின் வர்த்தகத்தை பெரிய அளவில் பாதித்திருக்கும். அதனால் அது தவிர்க்கப்பட்டிருக்கிறது. பிறகு ஏன் வைக்கப்பட்டது...? உணர்வுகள்... உணர்வுகள் தான் இங்கு பெரிய மூலதனம்... முதலீடு! அதை விதைத்தால் எதையும் அறுவடை செய்யலாம். 

தமிழ்நாடு இந்தியை விரும்பவில்லை என்பதை அவர்கள் மொழியிலேயே சொல்லியிருக்கலாம். இன்னும் கொஞ்சம் கூட அவர்கள் புரிந்திருப்பார்கள். ஆனால் அது பணம் தராது... வசூல் தராது... என்பதை புரிந்திருப்பதால் தான் இது மாதிரியான பிறழ் ‛காட்சி’கள் தொடர்கின்றன! ஆங்கில சப்டைட்டில் இல்லையென்றால் இதுவும் தெரிந்திருக்காது!