தங்கள் அகாடமியில் உறுப்பினராவதற்கான அழைப்பை நடிகர் சூர்யா மற்றும் நடிகை கஜோல் ஆகியோருக்கு விடுத்திருக்கிறது ஆஸ்கர் அமைப்பு.


The Academy of Motion Pictures Arts and Sciences என்ற அமைப்புதான் ஆஸ்கர் விருதுகளை ஆண்டுதோறும் ஒருங்கிணைக்கிறது. இந்த அமைப்பில் உறுப்பினராவதற்கு திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பிதழை அனுப்பும். தங்கள் அகாடமியில் சேர்வதற்காக இந்த ஆண்டு 397 பேருக்கு அழைப்பிதழ் வழங்கியுள்ளது இந்த அமைப்பு. இந்த 397 பேரில் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான சூர்யா, நடிகை கஜோல், இயக்குனர் மற்றும் கதாசிரியர் ரீமா கக்டி ஆகியோரும் அடங்குவர். இருவரது பெயரும் நடிகர்களுக்கான உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர்கள் மட்டுமல்லாமல் டாக்குமெண்ட்ரி படம் எடுப்பவர்களான சுஷ்மித் கோஷ் மற்றும் ரிண்டு தாமஸ் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளது. இதில் ரிண்டு தாமஸின் ‘Writing with fire’ என்ற டாக்குமெண்ட்ரி ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


அதேபோல “டெட் பூல்” தயாரிப்பாளர் ஆதித்யா சூட் மற்றும் சோஹினி செங்குப்தா ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கர் விருதுகள் 2021 பட்டியலில் 3 பிரிவுகளில் இடம்பெற்றது. ஆனால், வாக்குப்பதின் மூலம் தேர்வு செய்யப்பட்டதில் சூரரைப் போற்று எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. ஆனால், ஓடிடியில் வெளியாகி ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை சூரரைப் போற்று பெற்றது. சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ஜெய்பீம் திரைப்படம் இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு 276 படங்களுடன் சேர்த்து பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் தேர்வான 10 படங்கள் பட்டியலில் இப்படம் இடம்பெறவில்லை. எனினும், சூர்யாவின் நடிப்பு இப்படத்தில் சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றது. 


ஆஸ்கர் அமைப்பு அழைப்பு விடுத்திருக்கும் 397 பேரில் 44 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். மேலும், 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவிற்கு வெளியே 53 நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இந்த பட்டியலில் ஒட்டுமொத்தமாக 71 பேர் ஆஸ்கர் வெற்றிபெறுவதற்கான திறன் கொண்டவர்கள் மற்றும் ஏற்கனவே ஆஸ்கர் விருது பெற்ற 15 பேரும் அடங்குவர். ஆஸ்கர் அகாடமியில் இருந்து அழைப்பு வந்தாலே அவர்கள் உறுப்பினர்கள் ஆகிவிடமாட்டார்கள். உறுப்பினராவதற்கான படிநிலைகள் ஸ்பான்ஸர்ஷிப்பைக் கொண்டது. அது படிவம் போன்றது கிடையாது. உறுப்பினருக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆஸ்கரில் ஏற்கனவே உறுப்பினர்களாக இருக்கும் இரண்டு பேரால் ஸ்பான்ஸர் செய்யப்படவேண்டும். அதாவது, ஆஸ்கர் அகாடமிக்கு இருக்கும் பிரான்ச்களில், எந்த ப்ரான்ச்சில் சேர விண்ணப்பிக்கிறோமோ, அந்த ப்ரான்ச்சில் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ள இரண்டு பேர் ஸ்பான்ஸர்ஷிப் செய்ய வேண்டும் என்பது விதியாகும். இதில் உறுப்பினராகிவிட்டால் ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்செல்ஸில் நடைபெறும் ஆஸ்கர் விருதுகளுக்கு வாக்களிக்கும் தகுதியைப் பெறலாம்.


இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் ஏற்கனவே இந்த அகாடமியின் உறுப்பினர்களாக உள்ளனர். ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான், ஏஆர் ரஹ்மான், மாதுரி தீக்‌ஷித், வித்யா பாலன், அலி ஃபஸல், அமிதாப் பச்சன், ப்ரியங்கா சோப்ரா, ஏக்தா கபூர் உள்ளிட்ட பலர் இந்த அகாடமியில் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.