12 Years of Engaeyum Eppothum: எதிர்பாராத விபத்துகள் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை அழுத்தமாக சொல்லிய ‘எங்கேயும் எப்போதும்’ படம் வெளியாகி இன்றோடு 12 ஆண்டுகள் நிறைவடைகிறது.


எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூட்டணி


தெலுங்கில் 2009 ஆம் ஆண்டு வெளியான கணேஷ் படம் இயக்குநராக அறிமுகமான எம்.சரவணனின் அடுத்தப் படமே தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ ஆக அமைந்தது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை தயாரிக்க எதிர்பார்ப்பு எகிறியது. ஜெய், சர்வானந்த், அஞ்சலி, அனன்யா உள்ளிட்ட பலரும் நடித்த எங்கேயும் எப்போதும் படத்துக்கு சத்யா இசையமைத்திருந்தார். வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படம் ஏற்படுத்திய தாக்கம் அதிகம் என்பதை மறுக்க முடியாது.  


படத்தின் கதை 


நாம் தினம் தினம் நம்மை நெருங்கிய வட்டத்திலும், வாழ்விலும் ஏராளமான விபத்துகள் குறித்த செய்திகளை பார்த்திருப்போம். கண நேரத்தில் வாழ்க்கையை வாழ நினைத்த தருணத்தில் பறிபோகும் உயிர்கள் நம்மை, உயிருடன் இருக்கும்போதே ஏதாவது சிறப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தி விடும். குறிப்பாக சாலை விபத்துகள் எல்லாம் சொல்லவா வேண்டும். நமக்கே ஒருவித அச்ச உணர்வை புகுத்தி விடும். அப்படிப்பட்ட உணர்வை திரைகளின் வழியே நம் மனதுக்குள் கடத்தி பதைபதைக்க வைத்தது ‘எங்கேயும் எப்போதும்’. 


இப்படம் இரு காதலர்களின் கதையா, கனவுகளுடன் பயணம் மேற்கொள்பவர்களின் கதையா என்றால் ஒரு பயணத்தில் நாம் சந்திக்கும் அனைவரின் கதை என சொல்லி விடலாம்.சென்னையில் இருந்து திருச்சி செல்லும் பேருந்தில் அனன்யா, ஒருநாள் காதலன் சர்வானந்த்தை தேடி பயணப்படுகிறார். மறுபக்கம் அனன்யாவை தேடி சென்னையில் இருந்து திருச்சி செல்கிறார். இதே பேருந்தில் திருமணம் செய்யும் கனவுகளோடு ஜெய் - அஞ்சலி ஜோடி பயணம் மேற்கொள்கிறார்கள். இன்னும் விதவிதமான பயணிகள் இந்த இரண்டு பேருந்திலும் பயணிக்க, ஒரு இடத்தில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுகிறது. இதில் பயணித்த பயணிகளின் நிலை என்ன என்பதே இப்படத்தின் கதையாகும். 


தமிழ் சினிமாவுக்கு புதுசு


படத்தின் முதல் காட்சியே விபத்து தான். இதன் மூலம் நீண்டகாலமாக இருந்த சென்டிமென்ட் உடைக்கப்பட்டது.இதேபோல் படம் முழுக்க பஸ் பயணம் தான். ஒரு விபத்தை இவ்வளவு விலாவாரியாக  சினிமாவில் யாரும் படமாக்கப்படவில்லை. இதுதான் கிளைமேக்ஸ் என முதலிலேயே சொல்லி விட்டு இரண்டரை மணி நேரமும் ரசிகர்களை கட்டிப்போட்ட விதத்தில் சரவணன் ஜெயித்தார். ஜெய் - அஞ்சலி, சர்வானந்த் - அனன்யா இடையேயான காதல்கள் அழகாக படமாக்கப்பட்டிருந்தது. அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்கள். 


சர்வானந்த் - அனன்யா இடையேயான காதல் ஒரு ஹைக்கூ கவிதைப் போல இருக்கும். அதேபோல் காதலுக்காக பொய் சொல்வது தொடங்கி, படம் முழுக்க சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் ரியல் லைஃப் காதல் ஜோடியாக ஜெய் - அஞ்சலி ரசிக்கும்படியாக இருக்கும். பஸ்ஸில் ஒரு பேருந்துப் பயணத்தில் செல்போன் நம்பர் பரிமாறி காதல்கொள்ளும் இளம் வயதினர், துபாயில் வேலையை விட்டுவிட்டு முதன் முதலாகத் தன் குழந்தையைப் பார்க்க செல்லும் அப்பா, திருமணமான புதிதில் மனைவியைப் பிரிய மனம் இல்லாமல் தவிக்கும் கணவன், பஸ்ஸூக்குள் அங்கும் இங்கும் அலைந்து லூட்டி அடிக்கும் சுட்டிக் குழந்தை  என நாம் பயணத்தில் ரசிக்கும் காட்சிகளை அடுக்கி அசத்தியிருந்தார்கள். 


படத்தின் அத்தனை பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த படம் பார்த்த பலரும் பேருந்து பயணத்தைக் கண்டு சற்று பயம் ஏற்பட்டது என்பது உண்மை. அதுவே படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமைந்தது. 




மேலும் படிக்க: Vijay Antony: பாஜகவுடன் சேர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக செயல்பட்டேனா... விஜய் ஆண்டனி பரபரப்பு அறிக்கை!