தி கராத்தே கிட்
குங் ஃபுவை மையமாக வைத்து உருவான படங்களுக்கு எப்போதும் உலகளவில் உள்ள திரைப்பட ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு இருந்து வருகிறது . அந்த வகையில் 1984 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படம் கராத்தே கிட் முக்கியமானது . முதல் பாகத்தில் பாட் மொரிட்டா , ரால்ஃப் மாகியோ உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள். புதிதாக ஒரு ஊருக்கு குடி வரும் இளைஞரை அந்த ஊரைச் சேர்ந்த மற்ற இளைஞர்கள் அடித்து துன்புறுத்துகிறார்கள். இதை கவனிக்கும் பிளம்பர் ஒருவர் தன்னை தற்காத்துக் கொள்ள அவனுக்கு குங்ஃபு பயிற்சி அளிக்கிறார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து கராத்தே கிட் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின.
அந்த வரிசையில் 2010 ஆம் ஆண்டு ஜாக்கி சான் மற்றும் வில் ஸ்மித் நடித்த தி கராத்தே கிட் திரைப்படம் வெளியானது. அதே பழைய கதைக்களம் தான் என்றாலும் ஜாக்கி சான் மற்றும் வில் ஸ்மித் இருவரின் காம்போ இந்த படத்தில் பரவலாக பேசப்பட்டது. சர்வதேச அளவில் வசூலை வாரி குவித்தது இப்படம்.
தி கராத்தே கிட் லெஜன்ட்ஸ்
கிட்டதட்ட 14 ஆண்டுகளுக்குப் பின் தி கராத்தே கிட் படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. தி கராத்தே கிட் லெஜண்ட்ஸ் என்கிற டைட்டிலில் உருவாகியிருக்கும் இப்படத்தில் 1984 ஆம் வெளியான பாகத்தில் நடித்த ரால்ஃப் மாகியோ மற்றும் 2010 ஆம் ஆண்டு வெளியான படத்தில் நடித்த ஜாக்கி சான் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். இப்படத்திலும் கதைக்களம் ஒன்றுதான் என்றாலும் ஒரு இளைஞருக்கு இரு குருக்கள் சேர்ந்து பயிற்சி அளிக்கும் சுவாரஸ்யமான மாற்றத்தை செய்துள்ளார்கள் படக்குழுவினர்.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த டிரைலர் உலகம் முழுவதும் உள்ள ஜாக்கி சான் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. படத்திற்கு இப்போதிருந்தே ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்