இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் நுழைவாக இந்தியாவிலிருந்து கூழாங்கல் படம் தேர்வாகியுள்ளது. இது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள விக்னேஷ் சிவன், ‘வினோத் ராஜ் தனது சிறுவயதில் இருந்து பார்த்து வளர்ந்ததை வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.இந்தப் படம் இதுவரை 35 சர்வதேச மேடைகளில் திரையிடப்பட்டுள்ளது.படத்தைப் பார்த்த அனைவருமே இதனை தூய சினிமா எனக் கூறியுள்ளனர்.நாங்கள் இந்தப் படத்தை ராட்டர்டேம் திரைப்பட விழாவுக்குதான் பதிவு செய்தோம்.அதில் விருது வென்ற பிறகு வேறு எந்த விழாவுக்கும் நாங்கள் பதிவு செய்யவில்லை. ஆனால் ஒவ்வொரு திரைப்பட விழாவிலும் இந்தப் படம் பரிந்துரைக்கப்படுகிறது. பாராசைட் படத்தை அனைவரும் பாராட்டுவது போல இந்தப் படத்தையும் அனைவரும் பாராட்டுகிறார்கள்.






 


இந்தப் படத்தைத் தயாரிக்க இயக்குநர் ராம் பரிந்துரைத்தார். படத்தின் சில காட்சிகளைப் பார்த்ததும் இதனை நிச்சயம் தயாரிக்கிறோம் என உறுதியாகச் சொன்னது நயன் தான். தற்போது ஆஸ்கர் வரை வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களது முதல் தயாரிப்பே ஆஸ்கர் வரை சென்றுள்ளது.இதைவிட பெரிய மகிழ்ச்சி வேறு என்ன வேண்டும்.’


மேலும், ‘படத்தை மேலும் விளம்பரப்படுத்துவதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் இதற்கான தனி முகாமை உருவாக்கப் போகிறோம்.அரசும் எங்களுக்கு உதவ வேண்டும். இந்தப் படம் ஆஸ்கரில் வென்றால் நமது நாட்டுக்கே இது பெருமை. மற்ற படங்களைப் போல இதற்கு தனியாக விளம்பரமோ அழுத்தமோ தேவையில்லை. நல்ல படம் எப்போதுமே அதுவாகவே பேசப்படும்.அப்படித்தான் இதுவும்.இந்தப் படத்தைப் பார்க்கும் அனைவருக்குமே இந்தப் படம் பிடிக்கும் என்கிற தன்னம்பிக்கை எங்களுக்கு உள்ளது’ என்றார்.