இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகும் ’அண்ணாத்த’ திரைப்படத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 4 நவம்பர் 2021 தீபாவளி தினத்தன்று தமிழ்நாட்டின் திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 








சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். பல ஆண்டுகள் கழித்து மீனா மற்றும் குஷ்பூ ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தின் ஒருபகுதி படப்பிடிப்பு ராமோஜி பிலிம் சிட்டியில் மிக வேகமாக நடந்து முடிந்தது. மேலும் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாராவின் பகுதிகள் ஏற்கனவே எடுத்துமுடிக்கப்பட்டுவிட்டது என்று படக்குழு அறிவித்தது.


முன்னதாக எஞ்சிய சில காட்சிகள் வடமாநிலத்தில் படமாக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு தற்போது படக்குழு தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் ஏற்கனவே சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, படப்பிடிப்பு பாதியில் நின்றதால் இம்முறை இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு அனுமதிக்கப்படுவர் என்று படக்குழு அறிவித்தது. மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் நடிகை குஷ்பூவால் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாமல் இருந்தது. இந்நிலையில் குஷ்பூவும் தற்போது படப்பிடிப்பு பணியில் ஈடுபடுவார் என்றும் படக்குழு அறிவித்திருந்தது.