ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் டிசம்பர் 16-ஆம் தேதி  வெளியாக தயாராக இருக்கிறது அவதார் 2  : தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம். ஆனால் கேரளாவில் ஏற்பட்டு ஒரு சர்ச்சையால் இப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா எனும்  சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்து கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 



உலகெங்கிலும் வரவேற்பை பெற்ற அவதார் : 


ஜேம்ஸ் காமரூன் இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள அவதார் படத்தின் இரண்டாம் பாகமான தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம். கடந்த 2009ம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் உலகெங்கிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் தாறுமாறாக குவித்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. திரையரங்குகளில் முன்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 






கேரளாவில் ஏற்பட்டுள்ள சிக்கல்:


உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் டிசம்பர் 16ம் தேதி வெளியாகவிருக்கும் அவதார் இரண்டாம் பாகம் கேரளா மாநிலத்தில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் திரையரங்க உரிமையாளர்களின் கூட்டமைப்பு (FEUOK) இப்படத்தை கேரளாவில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இடையே ஏற்பட்டுள்ள கருத்துவேறுபாடு காரணமாக படம் திட்டமிட்டபடி டிசம்பர் 16ம் தேதி கேரளாவில் வெளியாவது குறித்து கேள்வி எழுந்துள்ளது. 






சர்ச்சைக்கு காரணம் :


அவதார் படத்தின் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெளியான பிறகு மூன்று வாரங்களாக வரும் கலெக்‌ஷன் தொகையில் ஒவ்வொரு வாரமும் 60 சதவீதத்தை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு  வழங்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என கூறப்படுகிறது. வழக்கமாக வேற்று மொழி திரைப்படங்கள் கேரளாவில் வெளியானால் 50 சதவீதத்தை மட்டுமே விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. அதற்கு மேல் வழங்கப்பட்டால் திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என அவர்களின் தரப்பில் கூறப்படுகிறது. 


ரசிகர்கள் ஏமாற்றம்?


இரண்டு தரப்புக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சுமூகமாக முடிவடையாத காரணத்தால் அவதார் 2 : தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் கேரளாவில் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் 3டி தொழில்நுட்பத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள படத்தை காணமுடியாமல் போய்விடுமோ என மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர் கேரள ரசிகர்கள்.