மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் பல ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் இணைந்த நடிகர் துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அப்படத்தில் இருந்து விலகினார். அவர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு இணைந்ததாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது. தற்போது சிம்பு ''தக் லைஃப்” படத்தில் நடிக்கக்கூடாது என்னும் பிரச்சனை கிளம்பியுள்ளது. 



 


'மாநாடு' படம் மூலம் கம் பேக் கொடுத்த சிம்பு அதை தொடர்ந்து ஐசரி கணேஷின் 'வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்' நிறுவனத்தின் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தில் நடித்திருந்தார். நல்ல வரவேற்பை பெற்ற அப்படத்தை தொடர்ந்து ஐசரி கணேஷ் தயாரிக்கும் அடுத்த படமான 'கொரோனா குமார்' படத்தில் சிம்புவை ஒப்பந்தம் செய்து அதற்கு சம்பளமாக ரூ. 9.5 கோடி பேசப்பட்டது. அட்வான்ஸ் தொகையாக ஏற்கனவே ரூ. 4.5 கோடி பெற்று கொண்ட சிம்பு அப்படத்தில் நடித்து கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார் என கூறப்படுகிறது.


இது குறித்து ஏற்கனவே 'வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்' ஐசரி கணேஷ் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து இருந்தார். 


'கொரோனா குமார்' படத்தை இதுவரையில் நடித்து கொடுக்காமல் 'தக் லைஃப்' படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது, ஐசரி கணேஷின் கோபத்தை மேலும் தூண்டியுள்ளது. இதனால் கோபமடைந்த அவர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சிம்பு மீது புகார் அளித்துள்ளார்.


'தக் லைஃப்' படத்தில் சிம்பு நடிக்க கூடாது. ஏற்கனவே அவர் ஒப்பந்தம் செய்த கொரோனா குமார் படத்தை முடித்து கொடுக்காமல் அவர் வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது. இது சம்பந்தமாக அவருக்கு ஏற்கனவே ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.  இந்த சர்ச்சையால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.