திறமையும், விடாமுயற்சியும் இருந்தால் நிச்சயம் உழைப்பிற்கு வெற்றி என்பது கண்டிப்பாக கிடைக்கும் என்பதற்கு தமிழ் திரையுலகில் ஏராளமானவர்கள் அடையாளங்களாக உள்ளனர். அந்த வகையில் கதாநாயகனாக நடிக்க சிவப்பாக, நல்ல கூந்தல் அழகுடன் இருக்க வேண்டும் என்ற வரைமுறையை உடைத்து கருப்பாக இருப்பவர்களும் கதாநாயகனாக நடிக்கலாம், அவர்களையும் மக்கள் கொண்டாடுவர்கள் என்பதை உருவாக்கியவர் ரஜினிகாந்த்.


தோற்றத்தால் விமர்சிக்கப்பட்டவர்:


அதேபோல, கதாநாயகன் என்றால் நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்ற விதியை உடைத்து ஒல்லியான தேகம் இருப்பவர்களும் நாயக அரிதாரம் பூசலாம் என்ற நம்பிக்கையை விதைத்தவர் தனுஷ். இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக, லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட பிரபலங்களாக உலா வரும் பலரும் தங்களது தொடக்க காலத்தில் நீயெல்லாம் ஏன் நடிக்க வந்தாய்? இந்த முகம் எல்லாம் மக்களுக்கு பிடிக்குமா? என்ற கேள்வியை எதிர்கொண்டவர்களே. அந்த வரிசையில் மிக மோசமான விமர்சனங்களை தன்னுடைய தோற்றத்தில் எதிர்கொண்டவர் தனுஷ்.


அண்ணன் செல்வராகவன் எழுதிய திரைக்கதையில் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கத்தில் முதன் முதலாக நாயகனாக துள்ளுவதோ இளமை படத்தில் 2002ம் ஆண்டு அறிமுகமானார் தனுஷ். பள்ளி பருவ கதாபாத்திரம் என்பதால் அவர் அந்த கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக இருந்தார். படம் பெரியளவு வெற்றி பெறாவிட்டாலும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும், தனுஷை மிக கடுமையாக பலரும் விமர்சித்தனர்.


வெற்றி நாயகன் தனுஷ்:


அதற்கு அடுத்த படத்தில் தன் தோற்றத்தை விமர்சித்தவர்களுக்கு பதிலடி தரும் விதமாக செல்வராகவன் முதன்முதலாக இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படத்தில் நாயகனாக மீண்டும் களமிறங்கினார். யுவன்ஷங்கர் ராஜா இசை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க படம் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் ஹிட்டடித்தது. குடும்பம், நண்பர்கள் என்று யாருமின்றி தனிமையிலே வளர்ந்த ஒருவனாகவும், தன் தோழி மீது ஒருதலை காதல் கொண்ட கல்லூரி மாணவராகவும் தனுஷ் நடிப்பில் மிரட்டியிருப்பார். அப்போதே, பலரும் இவர் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.


அடுத்த படம் முதலே கமர்ஷியல் டிராக்கிற்கு மாறிய தனுஷிற்கு திருடா திருடி மாபெரும் வெற்றி பெற்றது. அடுத்து வந்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சுள்ளான் படங்களில் தனுஷின் நடிப்பிற்கு பாராட்டும், விமர்சனங்களும் கலந்தே கிடைத்தது. குறிப்பாக, சுள்ளான் படத்தில் தனுஷ் மிகவும் துள்ளலாக நடித்திருப்பார். அவர் தோற்றத்திற்கும் படத்தில் இருந்த ஆக்‌ஷன் காட்சிகளும் பலரால் விமர்சிக்கப்பட்டது.


ஆக்‌ஷன் - காதல் டிராக்கில் கலக்கல்:


அந்த விமர்சனங்களை எல்லாம் தன்னுடைய நடிப்பாலும், தனது நடனத்தாலும் பதிலடி கொடுத்துக் கொண்டே தனுஷ் வந்தார். செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நாயகனாக நடித்த புதுப்பேட்டை படம் ஒரு சாதாரண இளைஞன் ஒரு ரவுடியாக எவ்வாறு மாறுகிறான் என்பதை அற்புதமாக காட்டியிருந்தது.


ஆனால், அப்போது அந்த படம் பெரியளவில் வெற்றி பெறாவிட்டாலும் இப்போதும் அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். அந்த படத்திற்கு பிறகு ஆக்‌ஷன், காதல், என இரண்டு டிராக்குகளிலும் தனுஷ் நடித்துக் கொண்டிருந்தார். அவரது இளமையும், அவரை பலரும் விமர்சித்த தோற்றமும் அதுபோன்ற திரைக்கதைகளுக்கு மிகவும் பக்கவாக பொருந்திப்போனது. மேலும், அவரது உடல்மொழியும் அவரது நகைச்சுவையும் அவரை சாமானிய ரசிகர்களும் ரசிக்கும்படி மாற்றியது.


அசர வைத்த ஆடுகளம்:


திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன் என அடுத்தடுத்த ப்ளாக்பஸ்டர் படங்களால் தான் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆக்‌ஷன் ஹீரோ என்று தனுஷ் நிலைநிறுத்திக் கொண்டார். அதில் பொல்லாதவன் படம் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவான முதல் படம் ஆகும். அந்த கூட்டணி தேசிய விருதுகளையும், வசூல் மழையும் தமிழ் சினிமாவிற்கு தரப்போகிறது என்பது பலருக்கும் அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அடுத்தடுத்து அவர் நடித்த குட்டி, உத்தமபுத்திரன் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.


இந்த சூழலில்தான், வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நாயகனாக நடித்த ஆடுகளம் படம் ரிலீசானது. இதுவரை தனுஷ் ஏற்றிராத கதாபாத்திரமான மதுரை மாவட்ட இளைஞராக நடித்து நடிப்பில் மிரட்டியிருப்பார். அந்த படம் தனுஷ் எப்பேற்பட்ட நடிகர் என்பதை அவரது தொடக்க காலத்தில் அவரை கேலி செய்தவர்களுக்கு சரியான பதிலடியாக அமைந்தது.


அந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன, 3, மரியான், நையாண்டி படங்கள் அவர் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அதில் வேங்கை மற்றும் மயக்கம் என்ன படம் மட்டுமே ஓரளவு ரசிகர்கள் வரவேற்பை பெற்றது.


கம்பேக் தந்த வேலையில்லா பட்டதாரி:


தனுஷின் அபாரமான திறமையை கண்டு அவருக்கு பாலிவுட்டும் சிவப்பு கம்பளம் விரித்தது. வட இந்திய இளைஞர் தோற்றத்தில் அவர் ராஞ்சனா என்ற படம் மூலமாக இந்தியில் நாயகனாக அறிமுகமானார். அந்த படம் அங்கு ஓரளவு வரவேற்பை பெற்றது. இந்தியில் நடித்தாலும் தமிழில் வசூல் நாயகனாக உலா வந்தாலே இங்கு மார்க்கெட்டை தக்க வைக்க முடியும் என்பதை உணர்ந்த தனுஷ் இந்த முறை அவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வேல்ராஜூடன் கைகோர்த்தார்.


வேல்ராஜ் இயக்குனராக அறிமுகமான வேலையில்லா பட்டதாரி படம் தனுஷின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் ரகுவரன் பி டெக் என்ற பெயரில் வெளியாகி அங்கேயும் வசூலை வாரிக்குவித்தது. தனுஷின் 25வது படமான வேலையில்லா பட்டதாரி பொறியியல் பட்டதாரிகளை மையப்படுத்தி பக்கா ஆக்‌ஷன் பேமிலி எண்டெய்னர் படமாக எடுத்ததால் 2014ம் ஆண்டின் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.


கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை:


படத்திற்கு படம் தனுஷின் கெட்டப்புகளும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மாரி படத்தில் அவரது கெட்டப் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படமும் வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. மீண்டும் தங்க மகன், தொடரி, கொடி என்று தோல்விப்பாதைக்கு சென்ற தனுஷிற்கு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. இது அவரது நடிப்பிற்கு கிடைத்த பெரிய கௌரவமாக பார்க்கப்படுகிறது. தி எக்ஸ்ட்ராஆர்டினரி ஜார்னி ஆஃப் தி பகீர் படத்தில் அவர் நடித்திருந்தார்.


அதன் பின்பு, கட்டாய வெற்றிக்காக தமிழில் காத்திருந்தவருக்கு வட சென்னை தனுஷின் நடிப்புக்கு தீனி போடும் விதமாக அமைந்தது மட்டுமின்றி ப்ளாக்பஸ்டர் படமாக அமைந்தது. ரஜினி போல ஒரு பக்கம் ஆக்ஷனும், கமல் போல நடிப்பும் என இரண்டையும் கலந்து கட்டி கலக்கி கொண்டிருந்தார். வடசென்னை 2ம் பாகம் எடுப்பதற்கு முன்பு கிடைத்த இடைவேளையில் கிடைத்த நேரத்தில் எடுக்கப்பட்ட அசுரன் படம் தனுஷ் – வெற்றி மாறன் கூட்டணியில் உருவான படங்களிலே மாபெரும் வெற்றி பெற்ற படமாக அமைந்தது. அந்த படத்தில் தனுஷ் சிவசாமி கதாபாத்திரத்தில் ஒரு நடிப்பு ராட்சசனாகவே இருந்திருப்பார். மற்றொரு பக்கம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்த கர்ணன் தனுஷ் நடிப்பில் தான் ஒரு கில்லாடி என்பதை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.


குடும்பங்கள் கொண்டாடும் நாயகன்:


ஆக்‌ஷன், ஜனரஞ்சகம் என்று கலந்து கட்டி வெற்றிப்படங்களை கொடுத்துக் கொண்டு வந்த தனுஷ், மிக அமைதியாக குடும்பங்கள் கொண்டாடும் விதமாக பக்கத்து வீட்டுப் பையனாக நடித்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் ஒரு சாதாரண இளைஞனாக மிக அற்புதமான நடிப்பை தனுஷ் வெளிப்படுத்தி அசத்தியிருப்பார். ஹாலிவுட்டில் தொடர்ந்த சிவப்பு கம்பளம் தனுஷிற்கு விரிக்கப்பட்டு வரவேற்கப்படுவதை அழுத்தமாக பறைசாற்றும் விதமாக தி கிரே மேன் படத்தில் மிக வலுவான கதாபாத்திரம் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும்.


இயக்குனர், தயாரிப்பாளராகவும் அசத்தல்:


நடிகனாக மட்டுமின்றி தான் ஒரு இயக்குனரின் வாரிசு மற்றும் இயக்குனரின் தம்பி என்பதையும் நிரூபிக்கும் வகையில் அவர் இயக்கிய பவர் பாண்டி படம் மாபெரும் வெற்றி பெற்றது. ராஜ்கிரணை வைத்து அவர் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தனுஷ் திகழ்கிறார்.


ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் அறிமுகமான தனுஷ் எதிர்நீச்சல், காக்கிச் சட்டை படங்களை தயாரித்துள்ளார். மேலும், மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்தையும் அவர் தயாரித்துள்ளார். நானும் ரவுடிதான், விசாரணை உள்பட பல படங்களை அவர் தயாரித்துள்ளார். தற்போது மாறுபட்ட கெட்டப்புகளில் ராயன் மற்றும் குபேரா படத்தில் அவர் நடித்து வருகிறார். மேலும் ராயன் படத்தையும், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் அவர் இயக்கி வருகிறார்.


தேசிய விருது நாயகன்:


நடிப்பு அரக்கனாக உலா வரும் தனுஷ் ஆடுகளம், அசுரன் படத்திற்காக சிறந்த நடிகர் என்ற தேசிய விருதை வென்றுள்ளார். இது மட்டுமின்றி சிறந்த இணை தயாரிப்பாளர் என்ற தேசிய விருதையும் காக்கா முட்டை, விசாரணை படத்திற்கும் பெற்றுள்ளார். எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஒரு பாடலுக்கு ஆடியவர், சீடன் படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், ஷமிதாப் படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்தும் அசத்தியிருப்பார்.


தமிழ் சினிமாவில் நாயகனாக உலா வருவதற்கு தோற்றம் எல்லாம் ஒரு விஷயம் கிடையாது என்பதையும், திறமை இருந்தால் போதும் என்பதையும், எந்த ஒரு நடிப்பு வகுப்பிற்கும் செல்லாமல் தனது இயல்பான நடிப்பால் லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் கட்டிப்போட்டுள்ள தனுஷ் முதன் முதலாக நடிகனாக அறிமுகமான நாள் இன்று.