கடந்த 2018-ம் ஆண்டு மேக்னா ராஜ், நடிகர் அர்ஜுனின் உறவினரான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னா ராஜும் இணைந்து நடித்த சில படங்கள் வெற்றிகரமாக ஓடின. மேக்னா ராஜ் கர்ப்பமான நிலையில், கடந்த ஜூன் மாதம் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவர் மறைந்தபோது, மேக்னா ராஜ், 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இளம் நடிகரின் இந்த திடீர் மரணம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மேக்னா இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக இணையத்தில் செய்தி பரவியது. பிக் பாஸ் டைட்டில் வின்னரான ப்ரீத்தமை நடிகை மேக்னா திருமணம் செய்யவுள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் சில யூடியூப் பக்கங்கள் செய்திகள் வெளியிட்டன. இந்த நிலையில் இந்த தகவல் குறித்து ப்ரீத்தம் தன் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள ப்ரீத்தம், வழக்கமான வதந்தியாக இதைக் கடந்து போகலாம் என்றே நினைத்தேன். ஆனால் செய்தி வைரலாக பரவுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்றார். பிக்பாஸ் டைட்டில் வின்னரான ப்ரீத்தமும் மேக்னா குடும்பத்தினர் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேக்னா தொடர்பான இந்த அதிகாரபூர்வமற்ற செய்தியை பரப்பிய யூடியூப் சேனலுக்கு அவரது ரசிகர்கள் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிட உரிமையில்லை என்றும், இல்லாத ஒன்றை வெறும் பரபரப்புக்காக ஏன் கூற வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், அப்படி எந்த தகவலாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபரே தெரிவிக்கட்டுமே, இந்த யூடியூப் சேனல்கள் முந்திக்கொண்டு அரைகுறையாக கத்துவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.