தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைத்தன்யா. இவர் தற்போது பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.அமீர்கான் நடிப்பில் அத்வைத் சந்தன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘ லால் சிங் சத்தா’ என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் நாக சைத்தன்யா. இந்த படமானது 1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ஃபாரஸ்ட் கம்ப் (Forrest Gump) என்ற படத்தின் ரீ-மேக்காக உருவாகி வருகிறது. அந்த படத்தில் டாம் ஹாங்க்ஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். ‘ லால் சிங் சத்தா’ படத்தின் போஸ்டர்கள் அவ்வபோது வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. சைத்தன்யாவின் முதல் பாலிவுட் எண்ட்ரி என்பதால் அவரது ரசிகர்களும் படம் குறித்த அப்டேட்டிற்காக காத்திருக்கின்றனர்.
முன்னதாக நாக சைத்தன்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆமிர்கான் , அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து தனது பாலிவுட் எண்ட்ரி குறித்து ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார். படத்தில் பாலா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த நாக சைத்தன்யா , ‘ லால் சிங் சத்தா’ படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது குறித்து பகிர்ந்துள்ளார். அதில் “ ஒரு நாள் எனக்கு ஆமிர்கான் சாரிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது அவர் படம் குறித்த முன்கதையை என்னோடு பகிர்ந்துக்கொண்டார். உடனே நான் மும்பை சென்று கதை விவாத பணிகளில் கலந்துக்கொண்டேன் . உடனே படத்தில் நடிக்க ஒப்பந்தமும் செய்யப்பட்டேன் “ என்றார். மேலும் ” என் படத்தின் டிரைலரை பார்த்து இம்ப்ரஸ் ஆனதாக அமீர்கான் தெரிவித்துவிட்டு, நீங்கள் என் படத்தில் இணைவது மகிழ்ச்சி நீங்கள் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருப்பீர்கள் என கூறினார். “ என சைத்தன்யா தெரிவித்துள்ளார்.
மேலும் அமீர்கான் செட்டில் பரபரப்பாக வேலை செய்துக்கொண்டே இருப்பாராம். இந்த படத்திலிருந்து என் வாழ்நாளுக்கு தேவையான நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் . அதை மறக்க மாட்டேன். என நாக சைத்தன்யா தெரிவித்துள்ளார். 45 நாட்கள் நாக சைத்தன்யா அமீர்கானுடன் ஷூட்டிங்கில் கலந்துக்கொண்டார். லால் சிங் சத்தா படத்தில் அமீர்கானுக்கு நெருங்கிய நண்பராக நடித்துள்ளாராம் நாக சைத்தன்யா. முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு சூழல் காரணமாக கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டதால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லால் சிங் சத்தா படத்தில் கரீனா கபூர் மற்றும் மோனா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.