லியோ படத்தின் அப்டேட்டால் தமிழ் சினிமாவின் அடுத்த அட்லீயாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாகிறாரா என கேள்வி எழுந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ்:
தமிழ் சினிமாவில் இதுவரை எடுத்தது மொத்தமே நான்கு படங்கள் தான். ஆனால், அவை யாவும் காலத்திற்கும் பேர் சொல்லும் அளவிற்கு பெரும் வெற்றி பெற்று, இயக்குனருக்காக படம் பார்க்க செல்வேன் என ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு தனக்கான கூட்டத்தை உருவாக்கி இருப்பவர் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவிற்கே புதியதான திரைப்படங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து சினிமாடிக் யூனிவர்ஸை உருவாக்கி, அதற்கான பிரமாண்ட எதிர்பார்ப்புகளை தக்க வைத்துள்ளார். இந்நிலையில் தான், மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை தொடர்ந்து, தற்போது நடிகர் விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார்.
விஜயின் லியோ:
மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் வெளியாகவுள்ள தமிழ் சினிமாக்களில் அதிக எதிர்பார்ப்புகளை கொண்ட பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் விஜயின் 49வது பிறந்தநாளையோட்டி லியோ படத்தில் இடம்பெற்றுள்ள, நா ரெடி பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
”நா ரெடி” பாடல்:
அந்த வகையில் இன்று மாலை (ஜுன்.22) 6.30 மணிக்கு நா ரெடி பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரை பார்த்தாலே அந்த பாடல் எவ்வளவு பிரமாண்டமாக இருக்கும் என்பதை அனைவராலும் உணர முடிகிறது. இந்த பாடல் தொடர்பாக பேசிய லியோ பட தயாரிப்பாளர் லலித் “நா ரெடி பாடல் பாடல் பெரும் பொருட்செலவ்ல் மொத்தம் 2000 டான்சர்களை வைத்து மொத்தம் 7 நாட்களில் உருவாகியுள்ளது . எட்டு நாட்களில் எடுக்க திட்டமிடப்பட்டு பின் ஏழு நாட்களில் எடுக்கப்பட்டிருக்கிறது” என பெருமிதத்துடன் தெரிவித்து இருந்தார்.
அட்லீ - பட்ஜெட் பிரச்னை:
இதனிடையே, தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாக தொடர்ந்து வெற்றிப்படங்களை இயக்கி வந்தவர் அட்லீ. ஆனால், சொன்னதை காட்டிலும் அதிக பட்ஜெட்டை இழுத்துவிட்டதால், பல தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படம் தயாரிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். பல தயாரிப்பாளர்களிடம் அட்லீயுடன் சேர்ந்து படம் செய்யலாமா என விஜயே கேட்டதாகவும், ஆனால் அவர் அநாவசியாமாக பட்ஜெட்டை ஏற்றிவிடுவார் என தயாரிப்பாளர்கள் பின் வாங்கிவிட்டதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாகவே தற்போது அவர் கோலிவுட்டை விட்டுவிட்டு தற்போது பாலிவுட்டில் தஞ்சம் புகுந்து ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
அட்லீ செய்த சம்பவங்கள்:
அட்லீயுடன் சேர்ந்து விஜய் 3 படங்களை இயக்கியுள்ளார். அதில் தெறி படத்தில் இடம்பெற்ற “ஜித்து ஜில்லாடி”, மெர்சல் படத்தில் இடம்பெற்ற “ஆளப்போறான் தமிழன், ஏய் சீனாகும் இவன் வண்டானா”, பிகில் படத்தில் இடம்பெற்ற “சிங்கப்பெண்ணே, வெறித்தனம்” போன்ற பாடல்களை பார்த்த்தாலே அவர் பாடல்களில் எந்தளவிற்கு பிரமாண்டத்தை காட்டுவார் என தெரியும். இந்த பாடல்கள் படத்திற்கு எள்ளவிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது. ஆனால், ஹீரோவை பிரமாண்டமாகவும், மாஸாகவும் காட்டுவதற்காக மட்டுமே நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள், பிரமாண்ட செட்கள், லைட்களை கொண்டு பாடலை படமாக்கி இருப்பார். அந்த வகையில் தான், லியோ படத்தில் இடம்பெற்றுள்ள நா ரெடி பாடலை லோகேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ளதாக தெரிகிறது.
அலறும் சிறுபட தயாரிப்பாளர்கள்:
ஏற்கனவே ரஜினி, விஜய் மற்றும் அஜித் போன்ற முன்னணி நாயகர்களை வைத்து பெருநிறுவனங்கள் மட்டுமே படம் தயாரிக்கும் ஒரு சூழல் தமிழ் சினிமாவில் நிலவி வருகிறது. இதில் சில இயக்குனர்கள் ஹீரோக்களை மகிழ்ச்சிப்படுத்த ஒரு பாடலுக்காகவே பல கோடிகளை கொட்டி வருகின்றனர். இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரிப்பது என்பது சிறுபட தயாரிப்பாளர்களுக்கு ஒரு கனவாகவே மாறிவிடும். ஏற்கனவே பாலிவுட், டோலிவுட் மற்றும் சாண்டல்வுட்டை சேர்ந்த பல பெரு நிறுவனங்களும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை கொண்டு படம் தயாரிக்க தொடங்கியுள்ளன. இதன் மூலமும் சிறுபட தயாரிப்பாளர்களுக்கான பல வாய்ப்புகள் மங்கியுள்ளன. அதிலும் தொடர்ந்து ஜனரஞ்சகமான படங்களை இயக்கி வெற்றி பெற்று வரும் லோகேஷ் கனகராஜ் போன்றோரும், இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவது என்பது தமிழ் சினிமாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பதே பலரின் கருத்தாக உள்ளது.