மண்வாசனை :
1983 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் சித்ரா லட்சுமணன் தயாரிப்பில் வெளியான திரைப்படம் மண்வாசனை. இந்த படம்தான் மறைந்த நடிகர் பாண்டியனின் அறிமுக திறப்படம் . இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரேவதி நடித்திருந்தார். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தின் தலைப்பிற்கு ஏற்ப மணக்க மணக்க மண் வாசம் திரைப்படம்.
உங்களுக்கு வேற ஹீரோவே கிடைக்கலையே ?
மண்வாசனை திரைப்படத்தின் ஷூட்டிங் போடிநாயக்கனூர் மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. அந்த சமயத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு முதலில் பாண்டியனை வரவழைத்துவிட்டு அதன் பிறகு இயக்குநர் பாரதிராஜா மற்றும் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஆகியோர் காரில் சென்றிருக்கின்றனர். ஆரம்பத்தில் பாண்டியன்தான் ஹீரோ என ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர் சித்ராவிற்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏகப்பட்ட மனக்குழப்பத்தை ஏற்படுத்திவிட்டனர் படக்குழுவினர். சித்ராவிடம் வந்து “ ஏன் சார் உங்களுக்கு வேற ஹீரோவே கிடைக்கலையே ? பாண்டியனெல்லாம் ஹீரோவா ? காமெடியன் மாதிரி இருக்கான்“ என சிலர் சொல்லவே சித்ராவிற்கு அதுவே ஒரு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பிறகு பாரதிராஜா என்ன நினைத்தாரோ தெரியவில்லை , சித்ராவிடம் “எதுக்கும் பையனுக்கு ஒரு ஆடிஷன் வச்சு பார்த்துடுவோம்“ எனக் கூறியிருக்கிறார். ஏற்கனவே பாண்டியனை ஹீரோவாக்க விருப்பம் இல்லாமல் இருந்த சித்ரா லட்சுமணனுக்கு இது மிகுந்த ஆனந்தத்தை ஏற்படுத்தியது.
வாக்குவாதத்தில் முடிந்த பேச்சுவார்த்தை ;
அடுத்த நாள் மேக்கப் ஆடிஷனில் செட்டில் இருந்த 95 சதவிகத்தினர் பாண்டியன் ஹீரோ மெட்டீரியல் இல்லை என சித்ரா லட்சுமணனிடம் கூறியிருக்கின்றன. ஆனால் ஒருவரும் பாரதிராஜாவிடம் அந்த விஷயத்தை பகிரவில்லை. அதன் பிறகு எழுத்தாளரும், இயக்குநருமான கலைமணியிடம் கதாநாயகனை மாற்ற வேண்டும், இது குறித்து இயக்குநரிடன் பேசலாமா என சித்ரா கூற சரி என இரவு 10 மணியளவில் இருவரும் இயக்குநர் பாரதிராஜாவின் அறைக்கு சென்றிருக்கின்றனர். ஆரம்பத்தில் சாதாரண பேச்சாக இருந்தது பின்னர் மிகப்பெரிய விவாதமாக மாறிவிட்டது. உடனே பாரதிராஜா சித்ரா லட்சுமணனிடம் “அந்த பையன் தான் ஹீரோ... உன்னால் முடிந்தால் படத்தை பண்ணு.. இல்லைனா நானே தயாரிச்சுக்கிறேன்.. உனக்கு அடுத்த படம் பண்ணி தற்றேன்“ எனக் கூறியிருக்கிறார்.
சபாஷ் பாண்டியா !
உடனே லட்சுமணன் பாரதிராஜாவிடம் “இனிமே நான் இந்த பையன் விஷயத்தில் தலையிட மாட்டேன்“ என உறுதியளித்திருக்கிறார். அதன் பின்னர் ஷூட்டிங் தொடங்கி நடைப்பெற்றிருக்கிறது. பலரின் வெறுப்பிற்கு மத்தியில் நடித்தாலும் பாண்டியன் திறமையான நடிப்பையே வெளிப்பட்டுத்தினார் என சித்ரா லட்சுமணன் நேர்காணலில் தெரிவித்திருந்தார்