பார்த்திபன் எழுதி இயக்கி நடித்திருக்கும் ‘இரவின் நிழல்’ படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் பரிசார்த்த முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் இயக்குநர் பார்த்திபனும் ஒருவர். இவர் தற்போது எழுதி இயக்கி, நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் “ இரவின் நிழல்”. உலகிலேயே முதல், “நான் லீனியர் சிங்கிள் ஷாட்” படமாக உருவாகியிருக்கும் இந்தப்படம் வருகிற ஜூலை 15 ஆம் திரையரங்குளில் வெளியாக இருக்கிறது. அண்மையில் இந்தப்படத்தின் சிறப்புக்காட்சி பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்ட நிலையில், அனைத்து தரப்பில் இருந்தும் நல்ல விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்தப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் தற்போது தொடங்கியுள்ளது.
3 சர்வதேச விருதுகள்
முன்னதாக பார்த்திபன் இயக்கி நடித்த ’ஒத்த செருப்பு’ படம் 2019ஆம் ஆண்டு தேசிய விருது உள்பட பல உலக விருதுகளை வாரிக் குவித்தது. அதன் வரிசையில் தற்போது அவர் இயக்கி இருக்கும் இரவின் நிழல் படமும் பல்வேறு உலகத்திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டது. இதில் மூன்று சர்வதேச விழாக்களில ‘இரவின் நிழல்’ படம் விருதுகளை வென்றுள்ளது.
ஒளிப்பதிவாளருக்கு விருது
குறிப்பாக இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்தர் A வில்சனுக்கு இரண்டு விருதுகளும், இரவின் நிழல் படத்துக்கு ஒரு விருதும் தற்போது கிடைத்துள்ளது. மேலும் இரண்டு சர்வதேச விருதுகளில் அதிகாரப்பூர்வ தேர்வுப் பட்டியலில் இப்படம் உள்ளது. இந்தப்படத்தை அண்மையில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இந்தப்படத்தை வெகுவாக பாராட்டியிருந்தார்.
இவர் மட்டுமல்லாது படத்தை பார்த்த பல திரைப் பிரபலங்கள், இதுவரை இப்படி ஒரு திரைப்படத்தை வாழ்நாளில் கண்டதில்லை என நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.