இயக்குநரும், நடிகருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
என்றுமே வித்தியாசத்திற்கு பெயர் பெற்றவர் இயக்குநரும் நடிகருமான இராதாகிருஷ்னன் பார்த்திபன். இவர் தான் நடிக்கும் கதாபாத்திரமோ, இயக்கும் சினிமாவோ அதில் தனது தாக்கத்தினை ஏற்படுத்தாமல் இருக்க மாட்டார். எப்போதும் ஒரு இயல்பான கதைக்களத்தினை யாரும் சொல்லாத கோணத்தில் சொல்லக் கூடிய இவர். தற்போதெல்லாம் வித்தியாசமான தொழில்நுட்ப முறையில் தனது படங்களை இயக்கிக் கொண்டு இருக்கிறார்.
ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தில், படம் முழுவதும் ஒரே கதாபாத்திரம் மட்டும் திரையில் தோன்றும் படியும், மற்ற கதாபாத்திரங்களை குரலாக மட்டுமே கொண்டு இயக்கி நடித்தார். இந்த திரைப்படம் பார்த்திபன் ரசிகர்களிடையே மட்டுமில்லாமல், சினிமா ரசிகர்களிடையேவும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இந்த உத்வேகத்தினை தனது ஊட்டச் சத்தாக எடுத்துக் கொண்டு தனது அடுத்த படமான இரவின் நிழல் படத்தினை, உலகின் முதல் நான் லேயர் சிங்கிள் ஷாட் படமாக எடுக்கப்போவதாக அறிவித்தார். சுமார் 90 நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்தப் படத்தினை சிங்கிள் ஷாட்டில் எடுத்து உலகையே தமிழ் சினிமாவின் பக்கமும், தனது பக்கமும் திருப்பியுள்ளார்.
இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் தனது பாணியில் வெளியிட்டு வந்தவர், இன்று (27/06/2022) ரீலீஸ் தேதியை பிரபல நட்சத்திரம் வெளியிடுகிறார் என, தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அவர் சொன்னதைப் போல் இரவின் நிழல் படத்தின் ரிலீஸ் தேதியினை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ஜூலை 15ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்பதை வெளியிட்ட நடிகர் தனுஷ் படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார். படத்தின் ரிலீஸ் தேதியினை வெளியிட்ட நடிகர் தனுஷுக்கு ’நன்றி தம்பி தனுஷ்’ என தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகரும் இரவின் நிழல் படத்தின் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கும் இப்படத்திற்கு இசை இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் என்பது மேலும் சிறப்பு.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்