இன்றைய தலைமுறையினரை கவரும் வகையில் பாலிவுட் இயக்குநர்கள் நல்ல கதைகளை எடுக்கவேண்டும் என பாலிவுட் இயக்குநர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார் பிரபல ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி.

'சில்ரன் ஆஃப் ஹெவன் ' , தி கலர் ஆஃப் பாரடைஸ்' உள்ளிட்ட இரானியப் படங்களை இயக்கியவர் மஜித் மஜிதி. இவரது சில்ரன் ஆஃப் ஹெவன் திரைப்படம் உலக அளவில் சிறந்த குழந்தைகளுக்கான படமாக கருதப்படுகிறது. இந்திய நிலத்தாலும் இங்கிருக்கும் மக்களாலும் ஈர்க்கப்பட்ட இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு ’பியாண்ட் தி கிளவுட்ஸ்’ என்கிற படத்தை இயக்கிநார். இஷான் கட்டர், மாளவிகா மோகனன் நடித்த இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். சமீபத்தில் இந்தியா வந்த மஜித் மஜிதி தற்கால பாலிவுட் சினிமா குறித்து தனது கருத்தைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது...


திரைப்பட உருவாக்கத்திற்கான சிறந்த கலாச்சாரமும் ஆற்றல் வாய்ந்த திறமையான கலைஞர்களும் இந்தியாவில் இருப்பதாக நான் நம்புகிறேன்.  இயல்பாகவே மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு நாடு என்பதால் இங்கு சொல்லப்பட வேண்டிய கதைகள் நிறைய இருக்கின்றன.  ஆனால் பாலிவுட் சினிமா இந்த வளத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் பிரச்சனைதான்.


 நான் பாலிவுட் சினிமாவிற்கு எதிரானவன் இல்லை. ஆனால் பாலிவுட் சினிமா மாற்றமடையாவிட்டால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை அது சந்திக்க வேண்டியதாக இருக்கும்.   இன்று மக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள். அனைத்துத்  தகவல்களும் அவர்களுக்கு கிடைக்கின்றன. இதனால் அவர்கள் மேலும் விழிப்புடன் இருக்கிறார்கள். இப்போது எடுப்பதைப்போன்ற படங்களை தொடர்ந்து பாலிவுட் இயக்கி வந்தால் அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள்  இப்போது இருக்கும் பெருவாரியான ரசிகர்களை அது இழந்துவிடும் ஆபத்து இருக்கிறது.


பாலிவுட் தங்களது கதைகளை மாற்றம் செய்யவேண்டும். இன்றைய தலைமுறையை பிரதிபலிக்கும் படங்களை அவர்கள் இயக்க வேண்டும்.


”சத்யஜித் ரே, ஷியாம் பெனகல் போன்ற இயக்குநர்கள் சிறந்த படங்களை இயக்கியிருக்கிறார்கள். இவர்களின் படைப்புகளின் வழியாக இந்திய சினிமாவை அடையாளப்படுத்தவேண்டும். ஒவ்வொரு படமும் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான படங்களை இயக்க வேண்டும் . இயக்குநர் மிரா நாயர் அப்படியான ஒரு படைப்பாளி. இன்றைய தலைமுறையினர்  திறமையானவர்களாக இருக்கிறார்கள் அவர்களை சரியான முறையில் வழி நடத்தினால் அவர்கள் அற்புதம் செய்யக்கூடியவர்கள்.” என்று அவர் கூறினார்.


தற்போது தனது இரண்டாவது இந்திய படத்தை இயக்கி வருகிறார் மஜித் மஜிதி.  தனது முதல் படத்தை  இயக்கியதைத் தொடர்ந்து  சன் சில்ரன் என்கிற தனது இரண்டாவது படத்தை இயக்கத் தொடங்கினார். கொரோனா நோய்ப்பரவல் காரணமாக இந்தப் படத்தின் வேலைகள் தடைப்பட்டன. இதன் காரணத்தினால் இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. விரைவில் தனது படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளார் மஜித் மஜிதி.