இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கத்தில் 1975ம் ஆண்டு வெளியான "அபூர்வ ராகங்கள்" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த். பின்பு மூன்றே ஆண்டுகளில் ஒரே வருடத்தில் 15 க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கும் அளவிற்கு முன்னேறினர். 1978ம் ஆண்டு சூப்பர் நடித்த 15 திரைப்படங்களில் ஒன்று "இறைவன் கொடுத்த வரம்" கருப்பு வெள்ளை திரைப்படம். அந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியன்று வெளியான  இப்படம் இன்றோடு 44 ஆண்டுகளை கடந்து விட்டது என்பது மலைப்பாக இருக்கிறது. 


 


பல வெற்றிப் படங்களின் நாயகன் ஏ. பீம்சிங்:


 


ஆகஸ்ட் 15ம் தேதி ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் திரைப்படம் வெளியானது.  அதை தொடர்ந்து செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் தான் "இறைவன் கொடுத்த வரம்". இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், விஜயகுமார், சுமித்ரா, ஃபடாஃபட் ஜெயலட்சுமி, ஸ்ரீகாந்த், சோ, ஜெயதேவி மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். கண்ணதாசன் படத்தின் பாடல் வரிகளை எழுத அதற்கு இசை மூலம் உயிர் கொடுத்து இருந்தார் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஆர். பாலகிருஷ்ணன் எழுத படத்தை இயக்கி இருந்தார் ஏ. பீம்சிங். இவர் குடும்ப பாங்கான திரைப்படங்களை எடுப்பதில் வல்லவர். நடிகர் திலகத்தை வைத்து பல வெற்றி திரைப்படங்களை இயக்கியவர். 


 



 


தங்கையின் விதி :


 


விஜயகுமார் மற்றும் அவரது தங்கையாக நடித்த நடிகை சுமித்ரா பற்றின கதை தான் இப்படம். தங்கைக்கு நல்ல வரனாக பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதே தனது லட்சியமாக நினைக்கும் அண்ணன் கதாபாத்திரத்தை மிகவும் அழகாக நடித்திருந்தார் விஜயகுமார். சூப்பர் ஸ்டார் அறிமுக காட்சியே பெண்களை சுற்றிவரும் ஒரு பிளே பாய் போல தான் படமாக்கியிருந்தனர். திடீரென ஒரு லட்சாதிபதியை போல சுமித்ராவை பெண் பார்க்க சென்று பின்பு அவசர அவசரமாக திருமணம் முடிகிறது. அங்கேயே போலீஸ் வந்து ரஜினிகாந்தை கைது செய்கிறது. சிறிது காலம் கழித்து சுமித்ராவின் நிலையை அறிந்து மறுமணம் செய்து கொள்ள முன்வருகிறார் நடிகர் ஸ்ரீகாந்த். திருமணத்திற்கு பிறகு இருவரும் வேலை நிமித்தமாக பம்பாய்க்கு செல்கிறார். அங்கு வாழ்க்கை தொடங்க ஆரம்பிக்கும் போது விபத்தில் ஸ்ரீகாந்த் இறக்க அவரின் வேலை சுமித்ராவுக்கு கொடுக்கப்படுகிறது.


 


கதையில் ஏற்பட்ட ட்விஸ்ட்:


 


இரண்டாவது திருமணமும் இப்படி ஆனது என்றால் அண்ணன் வருத்தப்படுவார் என எண்ணி அண்ணனிடம் இருந்து கணவன் இறந்ததை மறைகிறார். பிறகு உண்மை தெரியவர மிகவும் அதிர்ச்சியில் இருக்கும் குடும்பம் சுமித்ராவை தங்களுடன் இருந்து விடும் படி கூறுகிறார்கள். ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலைக்கு சேர அங்கே ஒரு ட்விஸ்ட். தனது முதல் கணவர் ரஜினிகாந்த் ஒரு கல்லூரி மாணவனாக இருக்கிறார். 


 


சுமங்கலியாக உயிர் பிரிந்தது:


 


கதையின் முதல் பாதியில் பிளே பாயாக காட்டப்படும் ராஜின் பின்பு மனம் திருந்தி பகலில் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுவது போலவும் மாலையில் கல்லூரிக்கு சென்று படிக்கும் மாணவனாகவும்  கதையை அமைத்திருந்தனர். திருந்திய ரஜினி மற்றும் அவரின் மனைவி சுமித்ராவிற்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து தர  வேண்டும் என எண்ணுகிறார்கள். ஆனால் அந்த சமயத்தில் உடல் நலம் சரியில்லாமல் சுமித்ரா உயிர் இழக்க அவரை உயிர் பிரிவதற்கு முன்னர் அவரை குங்குமம் வைத்து சுமங்கலியாகினர் ரஜினிகாந்த். 


 


ரஜினியின் டர்னிங் பாயிண்ட்:


 


இப்படம் முழுவதும் நடிகை சுமித்ராவை சுற்றியே நடக்கும் கதை. அவரின் வாழ்வில் வந்து போகும் கதாபாத்திரங்களாகவே மற்ற அனைவரும் நடித்திருந்தனர். அதில் ஒரு கதாபாத்திரமாகவே சூப்பர் ஸ்டார் நடித்திருந்தாலும் அந்த சமயத்தில் அவர் அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் திரைவாழ்வில் 1978ம் ஆண்டு ஒரு முக்கியமான ஆண்டு என்பது மறுக்கமுடியாத உண்மை.