இறைவன் மற்றும் பார்க்கிங் ஆகிய இரண்டு படங்களை ஒரே நாளில் வெளியிடத் திட்டமிட்டுள்ள பேஷன் ஸ்டுடியோஸின் மேல் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.


பேஷன் ஸ்டுடியோஸ்


தமிழில் அந்தகாரம், டக்கர் உள்ளிட்டப் படங்களைத் தயாரித்துள்ள நிறுவனம் பேஷன் ஸ்டுடியோஸ். தற்போது இறைவன் மற்றும் பார்க்கிங் என இந்த தயாரிப்பின் கீழ் இரண்டு படங்கள் வெளியாக இருக்கின்றன.


இறைவன்


 நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து வரும் படம் இறைவன். 'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ள நிலையில், யுவன்சங்கர் ராஜா  இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


மேலும் ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்தது.  தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி முதலில் ஆகஸ்ட் 25 என அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளிவைக்கப்பட்டதால் ஜெயம் ரவி ரசிகர்கள் சோகமடைந்தனர்.


இந்நிலையில் தற்போது செப்டம்பர் 28ஆம் தேதி இறைவன் படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 


பார்க்கிங்


ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம். எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பார்க்கிங். வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.


மேலும் அதே செப்டம்பர் 28ஆம் தேதி விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம், சித்தார்த் நடித்திருக்கும் சித்தா உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் ஒரே தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகியிருக்கும் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவது பிற தயாரிப்பு நிறுவனங்களுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தும் என்பது பிற தயாரிப்பாளர்களின் கருத்தாக இருக்கிறது. இது தொடர்பாக தனது எதிர்வினையை பதிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் தனஞ்சயன்.






” சேட்டலைட் மற்றும் டிஜிட்டல் விற்பனைகளில் நல்ல லாபத்தை ஈட்டிய ஒரே காரணத்திற்காக, இரு பேனரின் கீழ் வெளியாகும் இரண்டு படங்கள் வெளியிடப்படுவது நியாயமானது இல்லை. மொத்த வருமானத்தையும் ஒரே நபர் சுருட்டிக்கொள்ள நினைக்காமல் வணிகத்தில் சிறிது நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.