டாடா ஐபிஎல் ஸ்பான்சர் செய்யும் 2024 ஐபிஎல் சீசன் துவங்கவுள்ளதை முன்னிட்டு அதன் பரபரப்பு எங்கும் பரவத் துவங்கிவிட்டது. இது மற்றுமொரு அற்புதமான ஐபிஎல் ஆண்டாக இருக்கப்போகும் நிலையில், ஜியோ சினிமா அதன் விளம்பர பணிகளை தொடங்கியுள்ளது. மொத்தம் மூன்று விளம்பரப் படங்கள் தயாராகும் நிலையில் இதில் ஒரு விளம்பரத்தில் எம்.எஸ்.தோனி இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்.


இந்த மூன்று விளம்பரங்களுமே டாடா ஐபிஎல் போட்டிகளை ஒன்றாக டிஜிட்டல் தளத்தில் காணப்போகும் ஒருமித்த ஆவலை பெரிதளவில் தூண்டியுள்ளன. தற்போது, அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் டிஜிட்டல் தளங்களில் விளையாட்டுப் போட்டிகளை நேரலையில் காண விரும்புகிறார்கள் என்கிற செய்தியின் அடிப்படையில், இந்த விளம்பரப் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த டாடா ஐபிஎல் சீசனின் போது 449 மில்லியன் என்ற பிரம்மாண்ட பார்வையாளர் எண்ணிக்கையை ஜியோ சினிமா (JioCinema) தொட்டது குறிப்பிடத்தக்கது.


தி ஸ்கிரிப்ட் ரூம் நிறுவனம் சார்பில் எர்லி மேன் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த நகைச்சுவையான விளம்பரப் படத்தில் எம்.எஸ்.தோனி - தாத்தா மற்றும் பேரன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். படத்தில், டாடா ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடக்க, அப்போது பேரன் தனது தொலைபேசி திரையில் எதையோ மூழ்கி பார்த்துக்கொண்டிருப்பதும், பிறகு அது டாடா ஐபிஎல் எனத் தெரியவருகிறது.


அதே நேரத்தில் தாத்தாவும் தனது தொலைபேசியில் அதே போட்டியை ஆர்வத்துடன் பார்ப்பதும் காட்டப்படுகிறது; திடீரென அவருக்கு நெஞ்சுப்பகுதியில் ஏதோ அசௌகரியம் ஏற்படுகிறது. ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மருத்துவ உதவியாளரும் தனது தொலைபேசியில் ஐபிஎல் போட்டியைக் காண்கிறார். தாத்தாவும் பேரனும் ஆம்புலன்ஸின் உள்ளே அமர்ந்தபடி தங்கள் செல்போனில் ஐபிஎல்-ஐ காண்பதை தொடர்கிறார்கள்.


அப்போது தாத்தா ஏப்பம் விட, கதையில் ஒரு திருப்பம் நிகழ்கிறது. அவருக்கு ஏற்பட்டது வெறும் வாயுப்பிடிப்பு தான் என்பது அனைவருக்கும் தெரியவருகிறது. அதே நேரம் கிரிக்கெட் போட்டியில் ஒரு சிக்ஸ் பறக்க, மூன்று பேரும் ஆராவாரத்துடன் கொண்டாட விளம்பரப் படம் முடிகிறது. இந்த படைப்பு டிவி, டிஜிட்டல் தளங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகவுள்ளது.


 “நேயர்கள் தினசரி விளையாட்டுப் போட்டிகளை கேபிளில் காண்பதிலிருந்து தற்போது டிஜிட்டல் தளங்களுக்கு மாறும் போக்கு உள்ளது.  சமீபத்திய காலங்களில் பார்வையாளர்களிடையே நிலவும் இந்த மிகப்பெரிய மாற்றத்தினால் ஈர்க்கப்பட்டே இந்த விளம்பர படைப்பும் உருவாகப்பட்டுள்ளது. புதுமையான விதத்தில் நாங்கள் தோனி அவர்களை காண்பிக்க முயற்சி செய்துள்ளோம், அவரைப் பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியுடன் கொண்டும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையிலும் இந்த படைப்பு அமைந்துள்ளது,” என்றார்.