தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி கடந்த 2009 ஆம் ஆண்டு தொகுதியாக உருவாக்கப்பட்டது. முன்னதாக தூத்துக்குடி நெல்லை பாராளுமன்ற தொகுதியிலும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதி எனவும், கோவில்பட்டி சிவகாசி நாடாளுமன்ற தொகுதியிலும் இருந்தது. தொகுதி மறு சீரமைப்பின் போது தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் கொண்ட புதிய தொகுதியாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது.




கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டபோது நடைபெற்ற இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எஸ் ஆர் ஜெயதுரை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சிந்தியா பாண்டியனும் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ் ஆர் ஜெயதுரை வெற்றி பெற்றார்.




இதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தற்போதைய தூத்துக்குடி மாநகராட்சியின் மேயரும் அமைச்சர் கீதா ஜீவனின் சகோதரருமான என்.பி. ஜெகன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஜெ.ஜெ.டி நட்டர்ஜியும், மதிமுக சார்பில் தற்போதைய திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் போட்டியிட்டார்.இத்தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட்ட ஜோயலே வெற்றி பெறுவார் என பரப்பரப்பாக பேசப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெ.ஜெ.டி நட்டர்ஜி வெற்றி பெற்றார்.




இதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரி கனிமொழி போட்டியிட அவரை எதிர்த்து தற்போதைய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டார். இதன் காரணமாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி ஸ்டார் அந்தஸ்தை பெற்றது. அப்போதைய தேர்தல் களத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்ட விவகாரம் மிகவும் பிரதானமாக பேசப்பட்டது. மேலும் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிரிஸ்டண்டைன் ராஜசேகர் போட்டியிட்டார். மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்ற தேர்தல் பரப்புரை களம் காரணமாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முக்கியமாக கருதப்பட்டது. இந்த தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார்.




தற்போதைய நிலையில் 2024 ஆம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே களமிறங்குகின்றன. இந்த தேர்தலை பொறுத்தவரை திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி போட்டியிட வேண்டுமென தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு திமுகவினரும் விருப்ப மனு அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் அண்ணா அறிவாலயத்தில் தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்..






ஏற்கனவே தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வேண்டுமென்றால் தற்போதைய அமைச்சர் கீதா ஜீவன் அவருக்கு முன்னதாக அவரது தந்தை என். பெரியசாமி என வாரிசு அரசியலை தாண்டி யாரும் போட்டியிட முடியாதா என கேள்வி எழுந்தது. தூத்துக்குடி மாநகராட்சி மேயராக இருக்கும் என்.பி ஜெகன்பெரியசாமியும் அமைச்சரின் உடன்பிறந்த சகோதர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என விரும்புவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வந்த நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியை குறிவைத்து தற்போதைய தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் என்.பி.ஜெகன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளரும் உதயநிதியின் குட்புக்கில் இடம் பெற்றவருமான வக்கீல் ஜோயல் உள்ளிட்டோர் போட்டியிடலாம் என கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கனிமொழி கருணாநிதியை போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் நாடாளுமன்ற தேர்தல் அல்லது சட்டமன்ற தேர்தல் என எது வந்தாலும் திமுகவில் தேர்தலில் போட்டியிட உடன்பிறப்புகளுக்கு ஆசை வந்தாலும் உள்ளே அழுகுறேன் வெளியே சிரிக்கிறேன்னு போயிட்டே இருக்காங்க என்கின்றனர் தூத்துக்குடி கழக உடன்பிறப்புகள்.