சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியை காண சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏராளமான பிரபலங்கள் குவிந்தனர். 


மும்பை- சென்னை:


நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலகலமாக தொடங்கியது. ரசிகர்களின் பெரும் வரவேற்புகளுக்கிடையே லீக் போட்டிகள் அனைத்தும் கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு அணியும் இன்னும் 3 அல்லது 4 ஆட்டங்களில் விளையாட வேண்டி இருப்பதால் எந்த 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. காரணம் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது. 


இப்படியான நிலையில் இன்று நடைபெற்ற 49வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. சென்னை சேப்பாக்கத்தில்  உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் கடந்த மே 3 ஆம் தேதி விற்கப்பட்டது. ஆன்லைன் மற்றும் நேரடியாக விற்கப்பட்ட டிக்கெட்டுகளைப் பெற முதல் நாள் இரவு முதலே ஏராளமான ரசிகர்கள் சேப்பாக்கத்தில் குவிந்தனர். 


அபார வெற்றி:


இப்படியான நிலையில் இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.நடப்பு தொடரில்  இரு அணிகளும் முன்னதாக மோதிய முதல் போட்டியில் மும்பை அணியை அதன் சொந்த மண்ணில் சென்னை அணி வீழ்த்தியிருந்தது. இப்படியான நிலையில், அந்த தோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்புடன் மும்பை அணி களம் கண்டது. ஆனால் அந்த அணியில் வதேரா மட்டும் தனியாளாக போராடி 61 ரன்கள் எடுத்தார்.


மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக 20 ஓவர்களில் மும்பை அணி  8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது. சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகளையும், சாஹர்  மற்றும் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து  எளிய இலக்கை நோக்கி களம் கண்ட சென்னை அணி 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 


குவிந்த பிரபலங்கள்:


இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை காண ரசிகர்கள் குவிந்தனர். அதோடு மட்டுமல்லாமல் அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களும் சென்னை - மும்பை இடையேயான போட்டியை காண வந்தனர். அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் தனுஷ், நடிகை நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.