ஐ.நாவால் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 11-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதன்படி, இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் பெண் குழந்தைகளின் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ்பாபு. அவருக்கு சித்தாரா என்ற மகளும், கவுதம் என்ற மகனும் உள்ளனர். சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடிகர் மகேஷ் பாபு தனது மகளின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.






அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், என்னுடைய மகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து பெண்களையும் கொண்டாடுகிறேன். நட்சத்திரங்களை அடைய அவர்களுக்கு அதிகாரம் அளியுங்கள் மற்றும் எப்போதும் அவர்களுக்கு சிறந்தவர்களாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். மகேஷ்பாபுவின் இந்த பதிவிற்கு கீழ் அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மகேஷ்பாபு கடந்த 2005ம் ஆண்டு நடிகை நம்ரதா ஸ்ரீரோத்கரை திருமணம் செய்தார்.




மகேஷ்பாபு தற்போது புதியதாக நடித்து வரும் படமாகிய “சகருவாரிபடா” என்ற படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கி வருகிறார். மகேஷ்பாபுவின என்டர்டெயின்மெண்ட்ஸ், 14 ரீல்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர். 






இந்த படம் அடுத்தாண்டு பொங்கல் பரிசாக உலகெங்கும் வெளியாக உள்ளது. மகேஷ்பாபு படப்பிடிப்பிற்காக ஸ்பெயின் சென்றிருந்தாலும் அவருடன் அவரது மனைவி நம்ரதாவும், மகன் கவுதமும், மகள் சித்தாராவும் சென்றுள்ளனர். இதனால், அவர் ஸ்பெயினிலும் தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். நடிகர் மகேஷ்பாபு மட்டுமின்றி பல பிரபலங்களும் தங்களது மகள்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.