அண்மைக்காலமாகவே பிரிக்க முடியாதது கங்கனா ரனாவத்தும் சர்ச்சையும் என்று கூறும் அளவுக்கு சமூக வலைதளத்தில் அவர் பேசினால், எழுதினால் என எல்லாமே சர்ச்சையாகிக் கொண்டிருக்கின்றன. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த்தொற்று குறித்து கங்கணா ரணாவத் கூறிய கருத்து அபத்தமாக இருப்பதாக ஃபாலோவர்கள் பலரும் எதிர்ப்புக்குரல் எழுப்ப அவரது பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது.  ஆனால், விக்கிரமாதித்தனிடம் கேள்வி எழுப்புவதில் சற்றும் மனம் தளராத வேதாளம் போல் கங்கனா, இன்ஸ்டாகிராமின் முடிவையும் கிண்டல் செய்திருக்கிறார்.

 


 

முன்னதாக, கடந்த சனிக்கிழமை கங்கனாவுக்கு கொரோனா தொற்று உறுதியனாது. இதுதொடர்பாக அவர், தனக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்துடன் பகிர்ந்திருந்தார். பிரச்சினை அதுவல்ல. அந்தத் தகவலுடன் அவர் ஒரு விளக்கமும் பதிவிட்டிருந்தார். அதுவே பூதாகரமானது.

கங்கனா, "இந்த கிருமி என் உடலில் கொண்டாட்டமாக இருந்து வந்திருக்கிறது எனக்கு சுத்தமாக தெரியவில்லை. இப்போது எனக்குத் தெரிந்துவிட்டது என்பதால் அதை நான் அழிப்பேன். அனைவரும் வாருங்கள் இந்த கோவிட்-19 கிருமியை அழிப்போம். இது வெறும் சிறு காய்ச்சல் மட்டுமே. அதிகமான ஊடக வெளிச்சத்தால் மக்களை அச்சுறுத்திவருகிறது. ஹர ஹர மகாதேவ்" என்று குறிப்பிட்டிருந்தார்.உலகையே அதிரவைத்திருக்கும் கோவிட்-19 தொற்றை 'சிறு காய்ச்சல்' என்று தவறாகக் குறிப்பிட்டதால் அவரது இந்தப் பதிவு நீக்கப்பட்டிருப்பதாக விளக்கப்பட்டிருக்கிறது.

 


 

இந்த நீக்கத்தைக் கிண்டல் செய்யும் விதமாக, கங்கனா இன்னொரு பதிவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.அதில் "கோவிட்டை அழிப்பேன் என்று நான் அச்சுறுத்திய பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது. ட்விட்டரில் தீவிரவாதிகளும், கம்யூனிஸ ஆதரவாளர்களும் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது கோவிட் ரசிகர் மன்றமா. அற்புதம். நான் இன்ஸ்டாவுக்கு வந்து இரண்டு நாட்கள் கடந்துள்ளன. இங்கு இன்னும் ஒருவாரம் கூட தாங்க மாட்டேன் என்றே நினைக்கிறேன்" என்று  இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் கங்கனா பதிவிட்டிருக்கிறார்.

 

இப்படியாக தொடர்ந்து சர்ச்சைக் கருத்துகளைப் பதிவிட்டுவரும் கங்கனா ரனாவத், "ஒரு சாதாரண குடிமகளாகத்தான் சமூகவலைதளங்களில் நான் சமூகக் கருத்துகளைப் பதிவு செய்கிறேன். அதற்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் அரசியல்வாதியாக விரும்பவில்லை" என்று கூறியிருந்ததை மறந்திருக்க முடியாது. ஏற்கெனவே, மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த வன்முறை குறித்த கங்கனாவின் சர்ச்சைக் கருத்தைக் காரணம் காட்டி ட்விட்டர் நிறுவனம் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கியது குறிப்பிடத்தக்கது. ட்விட்டரிடம் குட்டு வாங்கியவர், இஸ்டாகிராமிடமும் திட்டு வாங்கிவிட்டார். இருடா எனக்கே பயமாத்தான் இருக்கு என்று காத்திருக்கிறார்கள் இன்ஸ்டாகிராம்வாசிகள்.