இந்தியாவை உலுக்கிய ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பான வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஓடிடி தளங்கள் வந்துவிட்ட பிறகு சினிமாவில் எடுக்கத் தயங்கும் பல சம்பவங்கள் படமாகவும், வெப் சீரிஸ்களாகவும் எடுக்கப்பட்டு வருகிறது. போபால் விஷவாயு கசிவு, வீரப்பன், கேரளாவில் நடைபெற்ற கொலை வழக்கு என தொடர்ச்சியாக உண்மை சம்பவங்கள் ஆவணப் படமாகவும் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவருகிறது. இத்தகைய ஓடிடி தளங்களில் வெளியாகும் படைப்புகளுக்கு சென்சார் போர்டு இல்லை என்பது இந்த படைப்புகளை அதிருப்திக்கு உள்ளாகியவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.


இப்படியான நிலையில் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி நாட்டையே உலுக்கிய ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பான ஆவணப்படம் வெளியாகும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி,  அந்த ஆவணப்படத்தில் தான் குற்றவாளியே இல்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.  இதுதொடர்பான முன்னோட்ட வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இந்த நிலையில் தான் சம்பந்தப்பட்ட ஆவணப்படம் வெளியானால் அது வழக்கை திசை திருப்பும் என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மும்பை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ அதிகாரிகளுக்கு படத்தைப் போட்டு காட்ட உத்தரவிட்ட நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். அதன்படி இந்திராணி முகர்ஜியின் வெப்சீரிஸ் நேற்று வெளியாகியது. 






 பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பில் இருந்தவர் பீட்டர் முகர்ஜி. இவரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டு மீடியாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் இந்திராணி முகர்ஜி. இவர் தனது மகள் ஷீனா போராவை கொலை செய்து விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.  தொடர்ந்து இந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி மற்றும் முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். 


பீட்டர் முகர்ஜியின் முன்னாள் மனைவிக்கு பிறந்த மகன் ராகுலை தான் ஷீனா போரா காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த முறை தவறிய காதலுக்காக கொலை நடந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால்  தன் மகளை தான் கொல்லவில்லை என இந்திராணி முகர்ஜி மறுத்த நிலையில் இந்த ஆவணப்படம் “The Indrani Mukerjea Story: The Buried Truth” வெளியாகியுள்ளது.