பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலையை 2000 ரூபாயாக உயர்த்தும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பகீர் கிளப்பியுள்ளார்.


சூடுபிடித்து வரும் அரசியல் களம்:


இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் கூட இல்லாத நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. பாஜகவுக்கு எதிராக I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


அந்த வகையில், மேற்குவங்கம் ஜார்கிராம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது, பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து பேசிய மம்தா பானர்ஜி, "நெருப்புக்கு விறகு சேகரிக்க மக்களை மீண்டும் பாஜக கட்டாயப்படுத்தும்" என்று கூறினார்.


 






கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பானர்ஜி கூறியதாவது: "நாங்கள் இலவசமாக அரிசி வழங்கினோம். அவர்கள் (பாஜக) மீண்டும் வெற்றி பெற்றால், எரிவாயு விலையை ரூ.1,500-2,000 வரை உயர்த்தலாம். நீங்கள் சமையலுக்காக மீண்டும் பசுவின் சாணம் மற்றும் மரத்தை சேகரிக்க வேண்டும். அவர்கள் மேற்கு வங்கம் மற்றும் பழங்குடி மக்களை நேசிப்பதில்லை." எனத் தெரிவித்தார். 


பாஜகவுக்கு சவால் தரும் மம்தா:


”100 நாள் வேலைத் திட்டத்துக்கான பணம் கிடைக்குமா என்று ஒரு இளைஞரிடம் கேட்டேன். சுமார் 30,000 ரூபாய் கிடைத்ததாகச் சொன்னார். இவரைப் போன்றவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக மத்திய அரசு கொடுக்காத தொகை இது. 59 லட்சம் பேருக்கு நிலுவைத் தொகையை செலுத்தியுள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.


உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள மேற்குவங்கத்தில் இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டி வருகிறது.


ஆனால், மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ், அதற்கு பெரும் தடையாக உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், 22 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றது. 18 தொகுதிகளில் பாஜகவும் 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.