மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் சாலையின் நடுவே குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாக அம்மாநில உள்துறை அமைச்சர் இளம்பெண் மீது நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.


இந்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஸ்ரேயா கல்ரா. இவர் மக்கள் கரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள மாஸ்க் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பியிருக்கிறார். அதனால், இந்தூரில் உள்ள ரசோமா சதுக்கம் எனப்படும் பரபரப்பான சாலையில் ஜீப்ரா கிராஸிங் பகுதியில் நின்று சில விநாடிகள் முகக் கவசத்துடன் அழகிய நடனமாடுகிறார். ட்ராஃபிக் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிய வாகனங்கள் பச்சைக்காகக் காத்திருக்க, கண்களுக்கு பசுமை படைக்க வந்து குதிக்கிறார் ஸ்ரேயா. சாலை மழை தண்ணீரில் பளிச்சிட ஸ்ரேயா கருப்பு நிற ஆடை, கருப்பு நிற மாஸ்க் என ஸ்டன்னிங் லுக்கில் களமிறங்குகிறார். ஒரு சில விநாடிகள் அவர் ஆட்டம்போட்டுவிட்டுச் செல்ல. அத்தனைக் காட்சிகளும் போக்குவரத்து போலீஸாரின் சிசிடிவி கேமராவில் பதிவாகி விடுகிறது. அதை போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை போலீஸார் பார்ப்பதற்குள் சாலையில் இருந்த வாகன ஓட்டிகள் தத்தம் ஃபேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்து வைரலாக்கினர். அப்புறம் என்ன இணையம் முழுவதும் ஸ்ரேயாவின் ஆட்டம் வைரலாகிவிட்டது.




ஃப்ளாஷ் மாப்..


உலகளவில் ஃப்ளாஷ் மாப் என்பது மிகவும் பிரபலமான ஒன்று. ஏதாவது ஒரு விழிப்புணர்வுக்காக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிகபட்சமாக 10 நிமிடங்களுக்கு மிகாமல் நடனமாடி கருத்தை மக்களிடம் கொண்டு செல்வார்கள். ரத்த தானம், பாலின சமத்துவம், பாலியல் வனமுறைக்கு எதிராக என எதுவாகா வேண்டுமானாலும் இதன் பின்னணியாக இருக்கும். சில நேரங்களில் இப்படி எந்த ஒரு சமூகப் பார்வையும் இல்லாமல் ஏதோ ஒரு பிரபல பாடலுக்கான டான்ஸாகக் கூட இருக்கும். ஒய் திஸ் கொலவெறி பாடல், ஜிம்கி கம்மல் பாடல் எல்லாம் ப்ளாஷ் மாப் பாடல்களாக இருந்திருக்கின்றன. பெரும்பாலும் மக்களுக்கு இடையூறு இல்லாமல் மக்களை ரசிக்க வைக்கவோ, விழிப்புணர்வை ஏற்படுத்தவோ ஃப்ளாஷ் மாப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக இதன் மீது ஈர்ப்பு சற்று குறைந்துள்ளது என்றே கூற வேண்டும். இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ள இளம் பெண் ஸ்ரேயாவும் ஃப்ளாஷ் மாப் பாணியில் தான் விழிப்புணர்வை முயற்சித்ததாகக் கூறியிருக்கிறார்.


நடவடிக்கைக்கு உத்தரவு:


என்னதான் நல்ல காரணத்துக்காக என்று ஸ்ரேயா விளக்கம் கூறினாலும் பொது இடத்தில் அதுவும் போக்குவரத்து மிகுந்த இடத்தில் வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதைக்கும் வகையில் இளம் பெண் நடனமாடியது ஏற்கமுடியாது,. அவர் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். அப்போது தான் இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கலாம் என்ரு அவர் கூறியிருக்கிறார். மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.