சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு சிவப்பிரகாசம் நகரைச் சேர்ந்தவர் லட்சுமி ப்ரியா. 32 வயதான அவர், பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். திருமணமாகி 8 வயது மகள் இருக்கும் நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து மகளுடன் தனிமையில் வசித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆர்வமுடன் செயலாற்றி வந்த லட்சுமி ப்ரியாவிற்கு, பேஸ்புக் மூலமாக ஒருவர் அறிமுகமானார். தனது பெயர் மதன் குமார் என்றும், 32 வயதான தான் புழல் பகுதியில் வசிப்பதாகவும், புழல் சிறையில் உயரதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் அறிமுகமான மதன்குமார், அதன் பின் லட்சுமி ப்ரியாவுடன் சாட் மூலம் தினமும் பழகி நண்பரானார்.
தன் நண்பர் என்கிற முறையில், தனது கடந்த கால வாழ்க்கை பற்றியும், தன் கணவரை பிரிந்து வாழும் நிலை குறித்தும் லட்சுமி ப்ரியா, மதன்குமாரிடம் தெரிவித்துள்ளார். தான் தனது கணவரை விவாகரத்து செய்ய முயற்சிப்பதாகவும், ஆனால் அதற்கான வழி தெரியவில்லை என்றும் வேதனையுடன் மதன்குமாரிடம் தெரிவித்துள்ளார். அதை கேட்ட மதன்குமார், ‛இதெல்லாம் ஒரு மேட்டரா... விடுங்க... சுஜிஜிப்பி மேட்டர்... அவரை விவாகரத்து பண்ண நான் கேல்ப் பண்றேன்... அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு பெரிய தொகையை ஜீவனாம்சமாக வாங்கிடலாம்...’ என லட்சுமி ப்ரியாவிற்கு ஆசை வார்தை்தை கூறியுள்ளார்.
மதன்குமாரின் நம்பிக்கை வார்த்தைகளை முழுமையாக நம்பிய லட்சுமி ப்ரியா, அவர் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார். வழக்கை விரைந்து நடத்த வேண்டும், வழக்கு தொடர்பாக சிலரை சரி கட்ட வேண்டும் என்றெல்லாம் கூறி, அவரிடம் இருந்து 13 லட்சம் ரூபாய் வரை கறந்த மதன் குமார், அதன் பின் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. ஒரு கட்டத்தில் எதுவும் நடைபெறாததை அறிந்த லட்சுமி ப்ரியா, மதன் குமாரிடம் பணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த மதன்குமார், லட்சுமி ப்ரியாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அம்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் சிறை அதிகாரி மதன்குமார் மீது லட்சுமி ப்ரியா புகார் அளித்தார். அதன் பின் நடந்த விசாரணையில், மதன்குமார் சிறை அதிகாரி இல்லை என்பதும், போலி அடையாள அட்டை தயாரித்து லட்சுமி ப்ரியாவை ஏமாற்றியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக மதன்குமாரை கைது செய்த அம்பத்தூர் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதே புழல் சிறையில் அடைத்தனர். தனிமையில் இருந்த பெண்ணை ஏமாற்றி இரண்டு ஆண்டுகளாக தன்னை சிறை அதிகாரியாக காட்டி 13 லட்சம் ரூபாய் அபகரித்த இந்த பலே ஆசாமி போல பலர் உலா வருகின்றனர். சமூக வலைதளத்தில் அறிமுகமாகும் நபர்களிடம் கவனமாக பழக வேண்டும் என்பதையே இந்த சம்பவம் அறிவுறுத்துகிறது.